Asianet News TamilAsianet News Tamil

ஊரடங்கு நேர ஊழல்களில் பிஸியாக இருக்கும் எடப்பாடி... நீதிமன்றத்தால் அம்பலம்.. எரிமலையாய் சீறிய ஸ்டாலின்..!

கொரானோ நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை நாம் சுட்டிக்காட்டினால், "பேரிடர் நேரத்தில் கூடவா அரசியல்" என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வி கேட்பார். 

edappadi palanisamy tender Corruption...mk stalin
Author
Tamil Nadu, First Published May 3, 2020, 2:57 PM IST

ஊரடங்கு நேரத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையின் முறைகேடுகள் உயர்நீதிமன்றத்தில் அம்பலமாகியுள்ளன என மு.க.ஸ்டலின் கூறியுள்ளார்.  

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரானோ நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை நாம் சுட்டிக்காட்டினால், "பேரிடர் நேரத்தில் கூடவா அரசியல்" என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வி கேட்பார். ஆனால், ஊரடங்கு நேரத்திலும் - ஒரு டெண்டரை விட்டு - அதிலுள்ள முறைகேடுகள் உயர்நீதிமன்ற விசாரணைக்குப் போயிருக்கிறது.

edappadi palanisamy tender Corruption...mk stalin

உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு - காணொலி விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில் கூறப்பட்டுள்ள முறைகேடுகள் அதிமுக அரசின் ஊழல் சாம்ராஜ்யத்திற்கு “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” போல் இருக்கிறது. துரை ஜெயக்குமார் என்ற பதிவுபெற்ற முதல் நிலை ஒப்பந்தக்காரர், கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றினை பொதுநல வழக்காகத் தாக்கல் செய்துள்ளார். அதில் பாதிக்கப்பட்டவரே அவர் என்பதால், உயர்நீதிமன்றம் அந்த பொதுநல வழக்கை ரிட் மனுவாக தாக்கல் செய்ய அனுமதித்துள்ளது.

அந்த வழக்கில் கூறப்பட்டுள்ள முறைகேடுகள், அதிமுக ஆட்சியில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையின் “முறைகேட்டை” அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை உப கோட்டங்களில் 462.11கி.மீ. நீள நெடுஞ்சாலைத்துறை சாலைகளை ஐந்து வருடங்கள் பராமரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

edappadi palanisamy tender Corruption...mk stalin

ஊரடங்கு உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் - எங்கு பார்த்தாலும் மக்கள் கொரோனா பீதியில் உறைந்து போய் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த நேரத்தில் - அதாவது ஏப் 15அன்று ஆன்லைன் டெண்டர் தாக்கல் செய்ய கடைசி நாள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 32 பதிவு பெற்ற முதல்நிலை ஒப்பந்ததாரர்கள் செய்யும் வேலையை ஒரேயொரு ஒப்பந்ததாரருக்கு (MONOPOLY) வழங்கும் விதத்தில் இந்த டெண்டர் விடப்பட்டது என்று உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார் மனுதாரர்.

“இந்த டெண்டரில் கூறப்பட்டுள்ள பணிகள் 500 கோடி ரூபாய் மட்டுமே மதிப்பிலானவை. ஆனால், 1165 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இது 700 கோடி ரூபாய் வரை அதிகம்” என்றும் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அது தவிர “அரசு ஆணையில் உள்ள பணியின் ரூபாய் மதிப்பிற்கும் - டெண்டரில் உள்ள பணியின் ரூபாய் மதிப்பிற்கும் வேறுபாடு இருக்கிறது” என்பதையும் விளக்கிக் கூறியிருக்கும் அந்த மனுதாரர் “டெண்டருக்காக குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் பல" ஒருசில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களை மனதில் வைத்து, கொண்டு வரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

edappadi palanisamy tender Corruption...mk stalin

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒரு காண்டிராக்டர் - ஊரடங்கு நேரத்திலும் வழக்குத் தொடருவதற்கு காரணமான இந்த டெண்டரில், துறை அமைச்சராக இருக்கும் பழனிசாமி - கொரோனா பணிகளுக்கு இடையிலும் அவசரம் காட்டியது ஏன்? சாலை பராமரிப்புக்கான, ஐந்து வருட பணிகளுக்கு டெண்டர் விடுவதற்கு ஊரடங்கு முடிவிற்கு வரும் வரை ஏன் முதல்வர் பழனிசாமி பொறுத்திருக்கவில்லை?

கொரோனா நோய்த் தொற்றுப் பணியில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்; போர்க்கால அடிப்படையில் பணியாற்றுகிறோம் என்பதில், இப்படி உயர்நீதிமன்றம் வரை போகும் முறைகேடுகள் அடங்கிய டெண்டர்களை விடும் பணிகளும் அடங்கியுள்ளனவா? இப்படி அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்கத் தோன்றுகிறது. இந்த வழக்கை நிச்சயம் உயர்நீதிமன்றம் விசாரிக்கத்தான் போகிறது. அந்த விசாரணையில் எடப்பாடியின் டெண்டர் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரத்தான் போகின்றன. எல்லா வழக்கிலும் ஓடோடிச் சென்று “ஸ்டே” வாங்குவது போல், இந்த வழக்கையும் இழுத்தடிக்க முதல்வர் பழனிசாமி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யலாம்.

edappadi palanisamy tender Corruption...mk stalin

ஆனால், இன்னும் எத்தனை நாட்களுக்கு அதிகார துஷ்பிரயோகம்? நீதியின் சக்கரம் நிற்காமல், நிச்சயம் சுழன்றே தீரும். அப்போது ஊரடங்கு நேர ஊழல்களும், கொரோனா கால கொள்ளைகளும், டெண்டர் முறைகேடுகளும் மக்கள் மன்றத்திற்கு வந்தே தீரும். எந்த ஊழலில் இருந்தும் யாரும் தப்பி விட முடியாது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios