நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்கு வரும்போது தகுந்த கருத்தை தெரிவிக்கிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக கூறியதற்கு அமைச்சர்கள் அவர்மீது கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் நடிகர் கமலுக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஊழல்கள் குறித்து அமைச்சர்களின் இணையதள முகவரிக்கு புகார் அனுப்பி வையுங்கள் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். கமலின் அறிக்கைக்குப் பிறகு, அமைச்சர்களின் இணையதளத்தில் இருந்த செல்போன் நம்பர்கள், இ-மெயில் ஐடிகள் உள்ளிட்ட விவரங்கள் அகற்றப்பட்டிருந்தன. 

இதனையடுத்து, நடிகர் கமல், ஊழல் குறித்த புகார்களை, லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வையுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தார். தமிழக அமைச்சர்கள், நடிகர் கமல் ஹாசன் கருத்துக்கள் ஒவ்வொரு நாளும் வந்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கமல் அரசியலுகு வந்த பிறகு கருத்து சொல்லட்டும் பிறகு நாங்கள் கருத்து சொல்கிறோம் என்று கூறியிருந்தார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு குரல் கொடுத்தபோதே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று நடிகர் கமல் அண்மையில் தெரிவித்திருந்தார். இது குறித்த பல்வேறு கருத்துகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், கோவையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளரிடம் பேசும்போது, நடிகர் கமல் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார். நடிகர் கமல் ஹாசன் திரைப்பட நடிகர்.

அவர் அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்கு வரும்போது தகுந்த கருத்தை தெரிவிப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.