யாரும் கோரிக்கை வைக்காமலேயே மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் திட்டம் எனது எண்ணத்தில் உதித்தது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலமாக சேலத்திற்கு நேற்று இரவு வந்தார். இதனையடுத்து, இன்று பேரிய சோரகையில் நடைபெற்ற சென்றாயப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார். இதனையடுத்து, மேட்டூர் அருகே வனவாசியில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் உரையாற்றி முதல்வர்;- இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால் குடிநீர் பிரச்சனை தீர்ந்துள்ளது. மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டால் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். யாரும் கோரிக்கை வைக்காமலேயே மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் திட்டம் எனது எண்ணத்தில் உதித்தது. ஒரே ஆண்டில் 11 மருத்தவ கல்லூரிகளை திறந்து வைத்து தமிழக அரசு சரித்தர சாதனையை படைத்துள்ளது என தெரிவித்தார். 

பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை பொறுக்க முடியாமல் ரூமில் உட்கார்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். தினந்தோறும் அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகனாக வேண்டுமானால் திகழலாம். தமிழக அரசு மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகள் மக்கள் நலனோடு செயல்படவேண்டும். அரசியலோடு செயல்படக் கூடாது. கொரோனா தொற்று மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.