edappadi palanisamy silence is a retaliation from dinakaran intimidation
தனித்து நின்று தர்மயுத்தம் நடத்தும் பன்னீரை விட, சசிகலா தயவில் முதல்வர் ஆன எடப்பாடி, பேசாமலே நடத்தும் மவுன யுத்தம்தான், தினகரனை அதிகமாக சீண்டி பார்க்கிறது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்த சசிகலா, கட்சியும், ஆட்சியும் தமது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து போய்விட கூடாது என்பதற்காகவே, தினகரனை துணை பொது செயலாளராக நியமித்து சென்றார். ஆனாலும், தமது குடும்பத்தின் மீது மக்களுக்கு கோபம் இருப்பதால், அடக்கியே வாசிக்கும்படி தினகரனை எச்சரித்தே சென்றார்.
ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் தன்னிச்சையாக, தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்துக் கொண்டு களமிறங்கியதில் இருந்தே சிக்கல் ஆரம்பித்து விட்டது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை, இடைத்தேர்தல் நிறுத்தம் என பல்வேறு நெருக்கடிகள் வந்தது ஒரு பக்கம் இருந்தாலும், தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் வெளிப்படையாகவே அணிதிரண்டு அவரை அரசியலில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்து விட்டனர். இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் இருந்த காலத்தில், தினகரனுக்கு எதிரான எடப்பாடியின் அமைச்சர்கள் அணி வலுவாகி விட்டது.
சிறையில் இருந்து வந்த தினகரன், எடப்பாடியை பணிய வைக்க, எம்.எல்.ஏ, எம்.பி க்களின் ஆதரவை எல்லாம் திரட்டி நெருக்கடி கொடுத்து பார்த்தார். ஆனால் அவர் எதற்கும் அசரவில்லை. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்தார். இப்தார் நோன்பில் தினகரனை புறக்கணித்தார். குடியரசு தலைவர் தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவு என்று எடப்பாடியே நேரடியாகவே அறிவித்தார்.

தமது ஆதரவு எம்.எல்.ஏ க்களின் ஆதரவை பெறுவதற்காக, எடப்பாடி தம்மை வந்து சந்திப்பார் என்று தினகரன் நினைத்தார். ஆனால், பாஜகவுக்கு ஆதரவு என்று தினகரனே அறிவிக்கும் அளவுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கி விட்டார் எடப்பாடி. மறுபக்கம், அருண்மொழி தேவன், ஹரி போன்ற அதிமுக எம்.பி க்கள் வாயிலாக சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக ஊடகங்களிலும் பேட்டி கொடுக்க வைத்து விட்டார் எடப்பாடி.
இதெல்லாம் நடந்து முடிந்த பிறகும், கட்சி மற்றும் ஆட்சியில் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சியை கைவிடாத தினகரன், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் போன்ற தமது ஆதரவாளர்கள் மூலம் ஊடகங்களில் தமது கருத்தை வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறார்.

கூவத்தூரில் சசிகலா இரண்டு நாட்கள் இல்லை என்றால், இந்த ஆட்சி நிலைத்திருக்குமா? என்று வெற்றிவேல் பேசுகிறார். கட்சியின் பொது செயலாளர் யார், துணை பொது செயலாளர் யார் என்று முதல்வர்தான் தெளிவு படுத்த வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் பேசுகிறார்.

முதல்வர் எடப்பாடி, நரசிம்ம ராவ் போல மவுனம் காக்காமல் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வெற்றிவேல் கூறுகிறார். ஆனால், வழக்கம் போல அமைதியாக இருந்து கொண்டே இந்த முறை அருண்மொழி தேவன், ஹரி ஆகிய எம்.பி க்கள் மூலம் தமது பதிலை வெளிப்படுத்தி உள்ளார் எடப்பாடி.
தினகரன் ஆதரவாளர்களின் இந்த ஆரவாரம், சசிகலா குடும்பம் அரசியலை விட்டு ஒதுக்கப்பட்டு வருவதன் வெளிப்பாடே என்கின்றனர் அதிமுகவினர். அடுத்து இன்னும் என்னென்ன காட்சிகள் அரங்கேறப்போகிறதோ? என்றும் புலம்புகின்றனர் அதிமுக தொண்டர்கள்.
