edappadi palanisamy says that he always having faith in sasikala

தலைமை செயலகத்தில் இப்போதெல்லாம், தொகுதி பிரச்சினை குறித்து பேச, முதல்வரை சந்திக்கும் எம்.எல்.ஏ க்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவ்வாறு செல்லும் எம்.எல்.ஏ க்கள், முதல்வரிடம் என்ன பேசினாலும், வெளியில் வந்து தொகுதி பிரச்சினை பற்றி பேசியதாக மட்டுமே செய்தியாளர்களிடம் கூறுவார்கள்.

அந்த வகையில், தினகரனின் தீவிர ஆதரவாளர்களான, தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் நேற்று முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர்.

கடுகடுத்த முகத்துடன் உள்ளே சென்ற அவர்கள், வெளியில் வந்த போது, சிரித்த முகத்துடன் காணப்பட்டுள்ளனர்.

முதல்வரை சந்தித்த அவர்கள், எடப்பாடியில் சாதாரணமாக இருந்த உங்களுக்கு, அம்மாவிடம் பேசி அமைச்சர் பதவி வாங்கி தந்தவர் சின்னம்மா என்பதை மறந்து விட்டீர்கள் என்று கூறி இருக்கிறார்கள்.

சின்னம்மா சிறைக்கு செல்லும் போதும், விசுவாசமாக இருப்பீர்கள் என்றுதானே உங்களை முதல்வர் ஆக்கிவிட்டு சென்றார்கள். இந்த முதல்வர் பதவி சின்னம்மா கொடுத்தது என்பதை மறந்து விட்டீர்கள் என்று காரசாரமாக பேசி இருக்கின்றனர்.

அதற்கு, அதில் என்ன சந்தேகம், நான் என்றும் சின்னம்மா விசுவாசிதான். இப்போது நான் சிறையில் சென்று அவரை சந்தித்தால், ஆட்சிக்கு சிக்கல் வரும் என்பதால்தானே, சந்திக்காமல் இருக்கிறேன் என்று முதல்வர் கூறி இருக்கிறார்.

சின்னம்மாவை அரசியலை விட்டு ஒதுக்கி விட்டதாக சொல்வதற்கு, உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது? என்று, தங்க தமிழ்ச்செல்வன் கேட்டுள்ளார்.

அமைச்சர்கள்தானே, அப்படி கூறினார்கள், நான் எந்த இடத்திலாவது அப்படி கூறினேனா? என்று திருப்பி கேட்டிருக்கிறார் முதல்வர்.

அப்படி மற்றவர்கள் கூறினாலும், எங்களை போல நீங்களும் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டாமா? என்று எம்.எல்.ஏ க்கள் அவரை விடாமல் கேட்டுள்ளனர்.

அதற்கு, எக்காரணம் கொண்டும், ஆட்சி கவிழ்த்துவிட கூடாது என்று சின்னம்மா என்னிடம் கூறி இருக்கிறார்கள். நானும் உங்களை போல, அவ்வாறு குரல் கொடுத்திருந்தால், ஆட்சி கவிழ்ந்திருக்கும். அதனால் தான் அமைதியாக இருந்தேன் என்று எடப்பாடி கூறியுள்ளார்.

மேலும், சின்னம்மாவிடம் சொல்லுங்கள் இந்த எடப்பாடி என்றுமே சின்னம்மா விசுவாசிதான் என்று. சின்னமாவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி வந்தால், அதை எதிர்த்து முதல் ஆளாக நிற்பவன் நான் தான் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

அதனால், வந்த வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டது என்று மகிழ்ந்த தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகிய இருவரும், வெளியில் வந்த போது, தொகுதி பிரச்சினை குறித்து முதல்வரிடம் பேசியதாக தெரிவித்தனர்.