edappadi palanisamy record as chief minister of tamil nadu

தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படுமா? அணிகள் ஒருங்கிணைக்கப்படுமா? தினகரன் கைதாவாரா? என்றெல்லாம் பரவலாக மக்கள் பேசி வரும் நிலையில், இரண்டுமாத கால எடப்பாடியின் ஆட்சி எப்படி இருக்கிறது? என்றும் பேச வேண்டியுள்ளது.

ஏனெனில், ஜெயலலிதா இறந்து இரண்டுமாத காலம் முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், வரலாற்று சிறப்பு மிக்க ஜல்லிக்கட்டு சட்டத்தை கொண்டு வந்தார்.

வார்தா புயல் நிவாரண பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கினார். கிருஷ்ணா நதிநீரை சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்தார் என்றெல்லாம் பேசப்பட்டது.

அதேபோல், இரண்டுமாத காலம் முதல்வராக இருந்த எடப்பாடி, என்னென்ன செய்துள்ளார்? என்றும் பார்க்க வேண்டியுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தை கலைக்க முயன்ற போலீசார் மாணவர்களின் மீது கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இதே போன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும் போலீசார் அத்துமீறி நடந்துக் கொண்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற இயக்குனர் கௌதமன் கைது செய்யப்பட்டார். கத்திப்பாரா சாலைக்கு பூட்டு போட்டு நடத்திய போராட்டத்திலும் கெளதமன் உட்பட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூரில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய, சாமளாபுரம் பெண்மணியை கன்னத்தில் அறைந்த, கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனின் செயல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மக்களுக்கு அடிப்படை தேவையான பருப்பு வகைகளை ரேஷன் கடைகளில் வழங்குவதை எடப்பாடி பழனிச்சாமி அரசு நிறுத்தியுள்ளது. 

தமிழக விவசாயிகள் ஒருமாதத்திற்கும் மேலாக டெல்லியில் போராடி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற எடப்பாடி அரசு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 

அதே போல் நீட் தேர்வு , ஹைட்ரோ கார்பன் திட்டம் சார்ந்த பல கோரிக்கைகளுக்கு. அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்றே தெரியவில்லை.

எடப்பாடி, முதல்வராக பொறுப்பேற்றதும், பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம், 500 மதுக்கடைகள் மூடுவது உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதற்கான பணிகள் எந்த அளவில் உள்ளன. மூடிய டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களுக்கான மாற்று வேலை என்ன ஆனது? என்று இதுவரை தெரியவில்லை.

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க உத்தரவு, கோடைகால குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.100 கோடி ஓதுக்கீடு ஆகியவை மட்டுமே, அவரது அவரது இரண்டுமாத கால சாதனையாக சொல்லமுடியும்.

இனியாவது, அவர் சாதிக்க முயல்வாரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.