தமிழகத்தில் இதுவரை 1,612 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி தகவல் தெரிவத்துள்ளார். 

சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் 2,10,538 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் பேரின் கண்ணகாணிப்பு காலம் முடிவடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரிக்கிறது.

மக்களை துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல, என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசு சட்டம் பிறப்பித்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது மக்களின் கையில்தான் உள்ளது. கொரோனாவின் தாக்கம் குறைய தனிமைப்படுத்திக் கொள்வதுமட்டுமே தீர்வு. வெளிநாடு சென்றிருந்தாலும், மாநாடு சென்றாலும் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். 

மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 3.371 வெண்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. விரைவில் பரிசோதனை முடிவுகளை அறிந்துகொள்ள 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்படவுள்ளன. ரேபிட் டெஸ்ட் கருவிகள் ஏப்ரல் 9ல் கிடைத்த பிறகு வேகமாக பரிசோதனை செய்ய முடியும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.