தமிழக அரசுக்கு மெஜாரிட்டி உள்ளது   என்றும் 135 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் அரசை ஆதரிப்பதாகவும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், ஆளுநரை சந்தித்து, கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 109 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டதால் அவர் மெஜாரிட்டியை இழந்து விட்டதாகவும், உடனடியாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஈரோட்டில் இன்று மாலை நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர்  விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் , நாங்கள் பதவியேற்றதில் இருந்து ஸ்டாலின் தொடர்ந்து எங்கள் மீது குற்றம்சாட்டி வருகிறார் என தெரிவித்தார்.

அவரது குற்றச்சாட்டு அனைத்தும் தவறு என்றும்,  தமிழக அரசை பொறுத்தவரை நீட் தேர்வில் முழு விலக்கு வேண்டும் என்று தான் முழு அழுத்தம் தந்தோம் என்றும் குறிப்பிட்டார்.

கடைசி வரை போராடியும்,  நீட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்ற வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசுக்கு மெஜாரிட்டி உள்ளது   என்றும் 135 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் அரசை ஆதரிப்பதாகவும்  கூறிய  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நடைபெற்ற  எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சில காரணங்களால் சிலர் பங்கேற்கவில்லை என கூறினார்...