அதிமுகவுக்குள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இரண்டு பிரிவுகள் இருந்தாலும் தங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது போல் காட்டிக் கொள்கின்றனர். நாங்கள் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கி… எங்களை யாராலும் பிரிக்க முடியாது என இருவருமே அடிக்கடி ஸ்டேட்மெண்ட் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் உள்ளுக்குள் முட்டல் மோதல் இருந்து கொண்டேதான் உள்ளது. கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செல்வமும் ஒருவரை ஒருவர்  நம்புவதில்லை.

அண்மையில் 14 நாட்களுக்கு வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புகளை துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சிடம் தர மறுத்துவிட்டார்.

இதே போல் சில மாதங்களுக்கு முன்பு ஒற்றைத் தலைமை  வேண்டும் என அதிமுகவுக்குள் சிலர் போர்க் கொடி உயர்த்தினர். இதன் மூலம் தங்களில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதை நிரூபிக்க நினைத்தனர். ஆனால் அது அப்படியே அமுங்கிப் போனது.

இந்நிலையில் தான் அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட தேர்தல் ஆணையம் நெருக்கடி கொடுத்து வருகிறது. இதைப் பயன்படுத்தி தான் தான் அந்த ஒற்றைத் தலைமை என்பதை நிரூபிக்க முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயன்று வருதாகவும், அதற்காக சில அதிரடி பிளான்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்போதுள்ள அதிமுக பொதுக் குழு உறுப்பினர்களில் ஓபிஎஸ்ன் தீவிர ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். அவர்களை வைத்துக் கொண்டு பொதுக்குழுவைக் கூட்டி ஒற்றைத் தலைமையை நிரூபிக்க நினைத்தால் அது நடக்காது என்பதை இபிஎஸ் உணர்ந்தே இருக்கிறார்.

இதையடுத்து தான் பொதுக்குழு கூட்டத்தை சிறிது நாட்கள் தள்ளிப் போட்டு அதற்குள் ஓபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களை வளைத்துவிடலாம் என இபிஎஸ் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படியோ தான் தான் அதிமுகவின் அந்த ஒற்றைத் தலைமை என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விடுவார் என்றே தெரிகிறது.