முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் பிடிவாதம் காட்டி வரும் நிலையில் அவரை டம்மியாக்கும் வகையில் புதிதாக 4 துணை முதலமைச்சர்களை நியமிப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் திமுக முழு வீச்சில் இறங்கியுள்ளது. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து அப்பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. அதற்கு காரணம் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று தற்போது வரை அதிமுகவில் முடிவு எடுக்கப்படவில்லை. மீண்டும் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக வர வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது ஓபிஎஸ்சை கடும் டென்சன் ஆக்கியது. இதனால் அவரை சமாதானம் செய்வதற்குள் இபிஎஸ் தரப்பிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

சமாதானப்படலத்தை தொடர்ந்து நடைபெற்ற சந்திப்புகளிலும் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் பிடிவாதமாக இருப்பதாகவே சொல்கிறார்கள். இதுநாள் வரை இபிஎஸ் முதலமைச்சராக இருந்துவிட்டார், எனவே இனி அவரை கட்சியில் முன்னிலைப்படுத்த முடியாது என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இதனால் அதிமுகவில் ஓபிஎஸ்சா? இபிஎஸ்சா? என்கிற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ முதலமைச்சர் பதவியை மட்டும் அல்ல முதலமைச்சர் வேட்பாளர் என்கிற பொறுப்பை கூட விட்டுத்தர முடியாது என்பதில் உறுதியாக உள்ளார். ஓபிஎஸ் வழிக்கு வரவில்லை என்றால் எப்படி அதிமுகவை தேர்தல் களத்திற்கு தயாராக்குவது என்கிற அளவில் அவர் யோசிக்க ஆரம்பித்துவிட்டதாக சொல்கிறார்கள். அதிலும் ஓபிஎஸ் அதிமுகவில் பிரச்சனை செய்தால் தென் மாவட்டங்களில் அவர் சார்ந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் அவர் பின்னால் செல்வார்கள் என்று இபிஎஸ் நம்புகிறார்.

எனவே அவர்களை சமாளிக்க எடப்பாடி பழனிசாமி புதிய வியூகம் வகுத்து வருவதாக சொல்கிறார்கள். அதில் ஒன்று தான் புதிதாக 4 துணை முதலமைச்சர்களை நியமிப்பது என்கிறார்கள். அதிலும் வன்னியர், நாடார், தலித் மற்றும் முஸ்லீம் ஒருவரை துணை முதலமைச்சராக நியமிப்பது பற்றி எடப்பாடி ஆலோசித்து வருவதாக சொல்கிறார்கள். இது ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பின்பற்றும் வழிமுறை ஆகும். ஜாதிக்கு ஒரு துணை முதலமைச்சர் பதவியை கொடுத்து வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வது ஜெகன் மோகனின் திட்டம் ஆகும்.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை புதிதாக துணை முதலமைச்சர் பதவிகளை 4 பேருக்கு பிரித்துக் கொடுப்பதன் மூலம் ஏற்கனவே துணை முதலமைச்சராக உள்ள ஓபிஎஸ்சை டம்மியாக்கிவிடலாம் என்று எடப்பாடியார் கருதுகிறார். மேலும் ஓபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் முரண்டு பிடித்தாலும் தன்னிச்சையாக தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துவிட்டு பிரச்சாரத்திற்கு செல்லலாம் என்றும் எடப்பாடியார் கருதுகிறார். இதன் மூலம் ஓபிஎஸ் அதிருப்தி அடைந்தாலும் கட்சியில் பெரிய அளவில் தாக்கம் இருக்காது என்று எடப்பாடியார் நம்புகிறார்.

அதோடு மட்டும் அல்லாமல் ஜாதிக்கொரு துணை முதலமைச்சர் பதவி என்பது சட்டமன்ற தேர்தலிலும் பெரிய அளவில் உதவும் என்றும் எடப்பாடியார் நம்புகிறார். ஏற்கனவே ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் புதிதாக துணை முதலமைச்சர்கள் நியமனம் மூலம் அந்தந்த ஜாதி மக்களிடம் இழந்த செல்வாக்கை அதிமுகவால் திரும்ப பெற முடியும் என்றும் எடப்பாடி கணக்குப்போடுவதாக சொல்கிறார்கள். அதிமுக மற்றும் தமிழக அரசை பொறுத்தவரை எடப்பாடி எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் அமைச்சர்கள் அனைவரும் ஆதரவாகவே உள்ளதால் துணை முதலமைச்சர் நியமனத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்காது என்கிறார்கள்.