edappadi palanisamy mourning to his supporters that modi will take care

’அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை’ என்று மீடியாவை நோக்கி ஏற்காடு விழாவில் கலக்கலாக இன்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி. ஆனால் இதே தகவலை ஏற்கனவேயே செந்தில்பாலாஜி கோஷ்டியிடம் கலங்கலாக தெரிவித்து கையை பிசைந்து கொண்டாராம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏன்? எதற்கு?
அர்ஜூனோட அம்மா யாரு?, புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? என்று சில காலத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டை சில கேள்விகள் கலக்கியெடுத்தன. அதேபோல் இப்போதும் ஒரு கேள்வி புரட்டி எடுக்கிறது.

அது ‘அ.தி.மு.க.வில் மொத்தம் எத்தனை கோஷ்டிகள்?’ என்பதுதான். இதற்கான விடைகளாக...ஆப்ஷன் எ) 3, ஆப்ஷன் பி. 4), ஆப்ஷன் சி) எவனுக்குடா தெரியும்?, ஆப்ஷன் டி) உடைய வெச்ச மோடிக்கு மட்டுமே தெரியும். என்று எகிடுதகிடாக போய்க்கொண்டிருக்கிறது நிலைமை. 

ஸ்டாலின், இளங்கோவன், திருநாவுக்கரசர் போன்றோர் சொல்வது போல் எடப்பாடியும், பன்னீரும் தினமும் மோடியிடம் ஓ.கே. வாங்கித்தான் தங்கள் பிரேக் ஃபாஸ்ட் மெனுவையே வீட்டில் கொடுப்பார்கள் போல. அந்தளவுக்கு முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் உத்தரவு படியே எல்லாம் நடப்பதாக உள் வட்டாரங்கள் ஊமைக்குத்தாக குத்தி தெரியப்படுத்துகின்றன. 

இந்நிலையில், தங்களுக்கான சாவி தலைநகரில் இருப்பது புரியாமல் எடப்பாடியிடம் ‘அமைச்சர் போஸ்டிங் கொடு, வாரியம் கொடு, வாய்க்காலை கொடு, வரப்பை கொடு’ என்று பிய்த்து எடுத்துக் கொண்டிருக்கின்றன சில கோஷ்டிகள்.

தோப்பு வெங்கி ஒரு பக்கம், மாஜி டிரான்ஸ்போர்ட் செந்தில் பாலாஜி மறுபுறம் என்று போட்டு பொசுபொசுப்பது போதாதென்று தேனி மாவட்டத்துக்கு மா.செ.வாகி ஓ.பன்னீரை உச்சகட்ட கடுப்பை ஏற்றியே தீருவேன் என்று தங்கதமிழ் செல்வன் தென்மேற்கிலிருந்தும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வைபவத்தில் பிரதான பிரதிநிதித்துவம் தரவில்லையென்றால் நம்பியாராய் மாறுவோம் என வடக்கிழக்கிலிருந்து வைகை செல்வனும் பிறாண்டி எடுக்கிறார்கள். 

இப்படி பல திசை தாக்குதல்களால் பதறி பஞ்சாமிர்தமாகிப்போன எடப்பாடியாரோ ‘போதும்யா போதும். போலீஸ் வேலைக்கு ஆசைப்பட்டு வந்தவன பொணத்துக்கு பந்தோபஸ்துக்கு அனுப்புன கதையா என்னை சி.எம்.ஆக்கி இப்படி சீரழியவைக்கிறாங்களே!’ என்று புலம்பித்தள்ளிவிட்டாராம். 

விளைவு கோட்டையில் தன்னை சந்தித்து ஒரு டைப்பாக பல கோரிக்கைகளை வைத்த செந்தில், தோப்பு, வைகை, தங்கம் உள்ளிட்ட டீமிடம் ‘தம்பி நீங்க ரொம்ப ராங்கா என்னை கால்குலேட் பண்ணி பல பதவிகளை எங்கிட்ட கேட்குறீங்க. ஆக்சுவலா என்கிட்ட எதும் இல்லை. எல்லாத்தையும் மேலே இருக்கிறவர்தான் (மோடி) பார்த்துட்டு இருக்கிறார்.

அவரு இப்போதைக்கு எந்த அமைச்சரவை மாற்றமும் வேண்டாம், கட்சி பதவியை எப்போ யாருக்கு எப்படி கொடுக்கணும்னு சொல்லி அனுப்புவோம், வேஷ்டியோட மடிப்பு கலங்காம வந்து உட்கார்ந்து விழாவை சிறப்பிச்சா போதுமுன்னு சொல்லியிருக்காப்ல. இதுதான் யதார்த்தம்.” என்று சன்னமான குரலில் சகலத்தையும் போட்டுடைக்க அதிர்ந்து போய் வெளியே வந்திருக்கிறார்கள் அவர்கள். 

ஆக்சுவலா எங்க பங்காளி வீட்டு கல்யாணத்துக்கு கூட பருப்பு ரசமா இல்ல பப்பாளி ரசமாங்கிறதையும் அவரை கேட்டுதான் முடிவு பண்ணனும் என்கிற ரேஞ்சுக்கு மோடியாரின் அதிகார விஸ்வரூபம் பற்றி பாடியார் பேசியது அலற வைத்திருக்கிறதாம் புரட்சி கோஷ்டியை. 

சரி, நாமும் வேஷ்டி மடிப்பு கலையாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்போம், இல்லேன்னா ஐ.டி. ரெய்டை நடத்தி நம் விலா எலும்பை அவர்கள் சிறப்பித்துவிட போகிறார்கள் என்று அவரக்ளுக்குள்ளாகவே ஒரு அமைதி முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.