நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் ஐபேக் என்ற நிறுவனத்தின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் உள்ளார். இவரது ஐபேக் நிறுவனம், காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளுடனும் பணியாற்றியுள்ளது. 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக்குவதற்கு இந்த நிறுவனம் பெரும் பணியாற்றியது.

 

அதேபோல், பீகாரில் நிதிஷ் குமாருக்கு மெகா கூட்டணி அமைக்க திட்டம் வகுத்தது. கடைசியாக ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஐபேக் நிறுவனம் பணியாற்றியது. இதில், ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் கட்சி மாபெரும் வெற்றி ஆட்சியமைத்தார். இதனையடுத்து, கிஷோரின் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்திற்காக டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று கிஷோரின் ஐபேக் நிறுவனத்தினர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் அடுத்த சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை வெற்றிபெற வைப்பதற்கான திட்டங்கள் குறித்து பேசப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 2021-ல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி விடலாம் என்று மு.க.ஸ்டாலின் கனவில் இருந்து வரும் நிலையில் எடப்பாடியின் இந்த வியூகம் திமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.