தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பட்ஜெட் உரைக்குப் பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தகுதிநீக்க வழக்கில் உள்ள 11 எம்எல்ஏக்களில் ஒருவராக இருக்கும் ஓபிஎஸ், 10-வது முறையாக பட்ஜெட் வாசித்துள்ளார். 

இதையும் படிங்க;- ஒவ்வொரு தமிழ் குடிமகன் தலையிலும் 57,000 ரூபாய் கடன்... அதிமுக ஆட்சியின் அவலம்..!

இந்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது. ஏறக்குறைய 196 நிமிடங்கள் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்திருக்கிறார். மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்தார். மத்திய பாஜக அரசை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு எப்படி பின்பற்றுகிறது என்பதற்கு இது ஒன்றே போதும். 

பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை, கடன்சுமை தான் தொடர்ந்து இடம் பெறுகிறது. திமுக 2011ல் ஆட்சியில் இருந்து விலகிய போது ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை தற்போது 3 மடங்கு உயர்ந்து ரூ.4 லட்சம் கோடியாக உள்ளது. இதில் தொலைநோக்கு திட்டமோ, வளர்ச்சி திட்டமோ இடம் பெறவில்லை.

இதையும் படிங்க;- விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ.11,00,00,000 கோடி... பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு..!

முதலமைச்சரின் துறை, அமைச்சர்கள் வேலுமணியின், தங்கமணி ஆகியோரின் துறைகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மர்மம் என்ன என்பது தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மக்களின் மீது கடன் சுமையை அதிகரித்து வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அமைச்சர் ஜெயகுமார் டெல்லிக்கு சென்று, அமைச்சர்களை சந்தித்து ஒரு ரகசிய கடிதம் வழங்கியுள்ளார். அதில் என்ன இருக்கிறது என்பதை இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.