பொதுவாக ஒரு பந்தில் 6 ரன்கள் தான் அடிக்க முடியும், ஆனால், ஒரு பந்தில் 9 ரன்கள் அடித்த பெருமை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கே உரித்தானது என  அமைச்சர் விஜயபாஸ்கர் புகழந்து பேசியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திருவெறும்பூர் எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ், குண்டூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி தேவைப்படுகிறது. குண்டூரில் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படும் என்று கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாட்டில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளதாக கூறினார். மேலும், ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்கலாம், சிக்சர் அடிக்கலாம், ஆனால் ஒரே பந்தில் 9 ரன் எடுப்பவர் தமிழக முதலமைச்சர் மட்டுமே. கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.