ஓ.பி.எஸ் தரப்பு தன்னை சந்திக்க முயல்வதாக தினகரன் கடந்த 2ந் தேதி சென்னையில் கூறிய போது யாரும் அவ்வளவு பெரிதாக இல்லை. ஆனால் ஓ.பி.எஸ் கடந்த ஆண்டு ஜூலை 12ந் தேதி தினகரனை சந்தித்து பேசினார் என்று தங்கதமிழ்செல்வன் கூறியதும் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இந்த சந்திப்பு நிகழ்ந்தது பற்றி முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கடந்த ஆண்டே தெரியும்.
   
தினகரனும் – ஓ.பி.எஸ்சும் சேர்ந்துவிட்டால் தனது முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து என்பதை உணர்ந்தே அவசர அவசரமாக ஓ.பி.எஸ்க்கு துணை முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பதவியை கொடுத்து பிரச்சனையை முடித்தார் ஈ.பி.எஸ். ஆனால் ஓ.பி.எஸ் – தினகரன் சந்திப்பு விவகாரம் இப்படி சந்தி சிரிக்கும் என்று எடப்பாடி நினைத்து கூட பார்க்கவில்லை.


   
ஏற்கனவே கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி செல்வாக்கோடு இருந்த போதும் தர்மயுத்தம் நடத்தியதால் தொண்டர்கள் மத்தியில் ஓ.பி.எஸ்க்கு ஓரளவு செல்வாக்கு உண்டு. இதே போல் தினகரனும் தனியாக கட்சி தொடங்கி இளைஞர்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு இருப்பது போல் உருவகப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் இருவரும் கடந்த ஆண்டு சந்தித்த தகவல் வெளியாகியுள்ளதால் இருவரது இமேஜூமே காலியாகும் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் மகிழ்ச்சிக்கு காரணம்.
   
ஏனென்றால் ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்துவிட்டதாக ஓ.பி.எஸ் தரப்பு குற்றஞ்சாட்டி வந்தது. அப்படி இருந்தும் ஓ.பி.எஸ்சை நேரில் தினகரன் சந்தித்தது ஏன் என்று அ.ம.மு.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதாவது தனது குடும்பத்தை மிக மோசமாக பேசிய ஓ.பி.எஸ்சுடன் ஏன் தினகரன் சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களின் கேள்வியின் சாராம்சம்.


   
இதே போல் சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் என்று கூறிவிட்டு தினகரனை நேரில் சந்தித்த ஓ.பி.எஸ் பாடோ மிகவும் திண்டாட்டம் ஆகியுள்ளது. தன் உடன் இருந்தவர்களிடம் கூட கூறாமல் தினகரனை சென்று ஓ.பி.எஸ் சந்தித்தது பதவிக்காகத்தான் என்று பலரும் பேச ஆரம்பித்துள்ளனர். இப்படியாக ஓ.பி.எஸ் மற்றும் தினகரனுக்கு எதிரான கேள்விகளால் அவர்களின் இமேஜ் டேமேஜ் ஆகும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் மகிழ்ச்சிக்கு காரணம்.