ஒற்றைத் தலைமை தலைவலி நீங்கிய நிலையில் படைபரிவாரங்களுடன் நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக தலைமைகளுக்குள் கோஷ்டி பூசல், ஒற்றைத்தலைமை கோஷம் என தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்குள் பல்வேறு அதிரடிகள் நடைபெற்று வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு தலைமைகள் கட்சி மற்றும் ஆட்சியை கவனித்து வரும் நிலையில், திடீரென ஒற்றை தலைமை வேண்டும் என்று எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா குரல் கொடுத்தார். 

அவரது கருத்தை குன்னம் எம்.எல்.ஏவும் வழிமொழிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை அவரசமாக நேற்று அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, அனைவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. மேலும் 5 தீர்மானங்களையும் நிறைவேற்றி முடித்துக் கொண்டது. 

இதையடுத்து நேற்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன், முதல்வர் பழனிசாமி திடீர் சந்திப்பை நடத்தினார். தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகின்றனர். எனவே அந்தப் பதவிகளுக்கு அடுத்ததாக யாரை நியமிக்கலாம் என்றும், சட்டமன்ற கூட்டத் தொடர் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி அரசியல் ரீதியாக நாளை டெல்லி பயணம் செய்கிறார்.

 

அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் செல்கின்றனர். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் வரும் 15ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திலும் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். எனவே தமிழக முதல்வரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.