திருவாரூர் அருகே முதலமைச்சர்  நட்ட நாற்று அமோக விளைச்சல் கண்டுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராசியான முதல்வர் என அந்த நிலத்தின் உரிமையாளர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு கடந்த மார்ச் 7ம் தேதி திருவாரூரில் விவசாயிகளின் சங்கங்களின் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. அன்று திருச்சியில் இருந்து திருவாரூர் போகும் வழியில் நீடாமங்கலம் அடுத்துள்ள சித்தமல்லி கிராமத்தில் உள்ள  வயல்வெளிகளில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் வயலில் இறங்கி நாற்று நட்டார்.

அவர் நட்ட வயலில் நாற்றுகள் நன்கு வளர்ந்து இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு  தயாரான நிலையில் உள்ளன. இதனை அறிந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று அந்த வயலை பார்வையிட்டார். அப்போது, அந்த வயலின் உரிமையாளர் சுப்பிரமணியன் தமது முதலமைச்சர் மிகவும் ராசியானவர் என்பதால் அவர் நட்ட நாற்றுகள் வளர்ந்து அதிக நெல் மணிகளை கொண்ட பயிர்களாக  வளர்ந்துள்ளது என்று பாராட்டினார். 

விவசாயத்திற்கு தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் 3வது அறுவடைக்கும் தண்ணீர் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும், கடந்த ஆண்டு டெல்டா பகுதி முழுவதும் நிறைய விளைச்சல் கிடைத்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.