பழனிசாமி சரித்திர விபத்தால் முதல்வரானவர். ஜோசியர் பழனிசாமியை சமாதானப்படுத்த 27 அமாவாசை கழித்து சூடம் ஏற்றுங்கள் வாய்ப்பு கிடைக்கும் என கூறியிருக்கலாம். தேர்தலில் தோற்றதை பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 270 அமாவாசை வந்தாலும் பழனிசாமி ஆட்சிக்கு வர முடியாது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கின்ற விதத்தில் 2024ம் வருடம் சட்டப்பேரவைக்கு தேர்தல் வரும். ஆகையால் 27 அமாவாசை தான் இந்த ஆட்சி, ஆகவே ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரச்சார இடங்களில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது;- ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தினால் வரும் 2024ம் ஆண்டு அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும், அதற்கு இன்னும் 27 அமாவாசை மட்டுமே இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்துக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்;- பழனிசாமி சரித்திர விபத்தால் முதல்வரானவர். ஜோசியர் பழனிசாமியை சமாதானப்படுத்த 27 அமாவாசை கழித்து சூடம் ஏற்றுங்கள் வாய்ப்பு கிடைக்கும் என கூறியிருக்கலாம். தேர்தலில் தோற்றதை பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 270 அமாவாசை வந்தாலும் பழனிசாமி ஆட்சிக்கு வர முடியாது.

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களவை, சட்டப் பேரவையில் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே பதவியில் இருக்க முடியும். ஒரே நாடு, ஒரே தேர்தலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வைப்பார்களா? பாதியில் பெரும்பான்மை இழந்து விட்டால் யார் ஆட்சி செய்வது, அடிக்கடி தேர்தல் நடத்துவது நாட்டுக்கு நல்லது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.