சேலத்தில் இன்று நடைபெறவிருந்த நிழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி, திமுக தலைவரின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை  நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். காவேரி ஆஸ்பத்திரியின் 4–வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், 8 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனையின் சார்பில் வெளியிடப்பட்ட  அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது என்றும்,  சிகிச்சைக்குப்பின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே இன்று சேலத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து திடீரென செய்யப்பட்டன.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக கோவை விமான நிலையம் சென்று , அங்கிருந்து விமானம் மூலம் சற்று முன் சென்னை திரும்பினார்.பின்னர் அவர் தனது இல்லத்துக்கு சென்றார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனைக்கு வந்து விசாரிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.