சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார். அவரது பேட்டி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார். அப்போது அதிமுகவின் கூட்டணி பலம் பொருந்தியது. யாரும் அதனிடம் நெருங்க முடியாது. உள்ளாட்சி, 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு இடைத்தேர்தல் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கி உள்ளனர்.

தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும். தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர்.

ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறாமல் போராட்டங்களை தூண்டிக்கொண்டுள்ளார்.  ஸ்டாலினின் எண்ணங்கள் அனைத்தும் இடைத்தேர்தல் மூலம் நிராசையாகி உள்ளன. இடைத்தேர்தல் வெற்றி வித்தியாசத்தின் மூலம் மக்கள் அதிமுக அரசை விரும்புவதை நிரூபித்துள்ளனர்.

தற்போது சிலர் அரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அண்ணா கண்ட கனவை நனவாக்கவே அதிமுகவை எம்.ஜி.ஆர் உருவாக்கினார், எம்.ஜி.ஆரைப் போன்று யாரும் திரையுலகில் இருந்து வர முடியாது. வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல  என்று நடிகர் ரஜினிகாந்த்தை குற்றப்படுத்தினார்.

உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு இடைத்தேர்தல் வெற்றி முன்னோட்டம் ஆகும்.