மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களில் உள்ள பயன்களைப் பட்டியலிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீண்ட அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டார். அந்த மசோதாக்களை ஏன் அதிமுக ஆதரிக்கிறது என்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று வேளாண் சட்டங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இது அதிமுகவினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.


இந்த மசோதாவில் மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு என விசித்திரமான இரட்டை நிலைப்பாட்டை அதிமுக எடுத்துள்ளதா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தங்கள் சுயநலத்துக்காக இப்படி நடந்துகொண்டதாகக் கூறி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் ஸ்டாலின் காட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வரின் அறிக்கைக்கு மாறாக பேசிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் மீது அதிமுகவினரின் கோபப் பார்வைத் திரும்பியுள்ளது.


ஏற்கனவே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஓட்டெடுப்பிலும் மத்திய அரசின் அதிகாரி மட்டத்திலிருந்து வந்த உத்தரவால், மசோதாவை ஆதரித்து வாக்களித்தோம் என்று எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுகவை பாஜக இயக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவந்த நிலையில், அதற்கு சான்று தரும் வகையில் இந்த விவகாரம் அமைந்தது. இந்நிலையில் முதல்வரின் கருத்துக்கு மாறாக எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் பேசியிருப்பது அதிமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பி கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச் செல்வன், “இது எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்தின் தனிப்பட்ட கருத்து” என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கூறுகையில், “மசோதாவில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி பேசினேன். மசோதாவை எதிர்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே கோவையில் நடக்கும் அதிமுக நிர்வாகிகள் கூட்டங்கள் எதிலும் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கலந்துகொள்வதில்லை என்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஏற்கனவே அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம், வழிகாட்டுதல் குழு அமைக்கும் விவகாரம் என பல விவகாரங்கள் சூடாகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதிமுகவில் குழப்பம் ஏற்படும் வகையில் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் விவகாரமும் உருவாகியுள்ளது.