எங்களது ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இருக்கிறார்கள், அவர்கள் தேவைப்படும்போது வெளியே வருவார்கள் என்று சொல்லி வந்தார்  தினகரன். அவர் சொன்னதைப்போலவே தற்போது எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கும் பல தகவல்கள் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து பேசிவந்த அவர்கள், நேற்றும், அதிமுகவில் உள்ள எங்களின் ஸ்லீப்பர் செல்கள் தொடர்ந்து எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள், ஸ்லீப்பர் செல்கள் அமைச்சர்களாகக் கூட இருக்கிறார்கள் என்றும் வெற்றிவேல் தெரிவித்தார்.

அப்படிப்பட்ட ஸ்லீப்பர் செல்களாக இருக்கிற அமைச்சர்கள் கடந்த தேர்தலில் தினகரனுக்கு தேர்தல் நிதி கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவல் எடப்பாடி & பன்னீர் வட்டாரத்தை  கதிகலங்க வைத்திருக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்காகவும், இடைத்தேர்தலுக்காகவும் கொடுக்கப்பட்ட பணம் அதிமுகவில் சரியாக கொண்டு போய் சேர்க்கப்படவில்லை என்ற புகார்கள் தேர்தலுக்குப் பின் அதிகமாயின. இதுபற்றி  எடப்பாடி  விசாரிக்கும் போது தான் அதிமுகவின் நிதி ஒழுங்காக மக்களிடம் போய் சேராதது மட்டுமல்ல, 10 அமைச்சர்கள் தினகரனுக்கே தேர்தல் நிதி வழங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் எடப்பாடியை விழி பிதுங்க வைத்திருக்கிறது.

ஏற்கனவே சுமார் 8 அமைச்சர்களை தினகரனோடு போனில் டிபன் சாப்டாச்சா, டீ குடிச்சாச்சா என விசாரிக்கும் அளவிற்கு இருப்பவர்கள் என்பதால் அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடிக்கு தெரிந்தாலும்  அதுபற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் தொடர்ந்து தினகரனோடு தொடர்பில் இருக்கும் அவர்கள் தேர்தல் நிதியும் வாரி கொடுத்திருக்கிறார்கள்.

இந்த தேர்தலில் எப்படியும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக ரிசல்ட் வரப்போவதில்லை என்பதை அறிந்த அவர்கள். தேர்தல் முடிவுக்குப் பின் யாருமே எதிர்பார்க்க முடியாத சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதால், அதிமுகவில் வலுவான ஆளுமை இல்லாததை மனதில் வைத்து, தினகரனின் தயவு நமக்குத் தேவை என்ற கணக்கு போட்டுதான் அமைச்சர்கள் தேர்தல் நிதி கொடுத்திருக்கிறார்கள். 

அதுவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்  தான் தினகரனுக்கு அதிக நிதி கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவலும் முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் ஷாக்கான அவர் இப்படி கூடவே இருந்துகொண்டு சக அமைச்சர்களே இப்படி செய்யலாமா? என நெருக்கமான அமைச்சர்களிடம் புலம்பித்தள்ளுகிறாராம்.