தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக எடப்பாடியும், துணை முதலமைச்சராக ஓபிஎஸ்ம் உள்ளனர். கட்சியைப் பொறுத்தவரை ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், முழு அதிகாரமும் எடப்பாடி கைகளில் தான் உள்ளது. 

ஓபிஎஸ் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு எம்.பி.சீட்  வாங்குவதற்குள் பெரும்பாடுபட்டுவிட்டார். இதையடுத்து இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே தொடர்ந்து பனிப் போர் நிலவி வருகிறது.

இந்நிலையில் மிக அண்மையில் குச்சனூர் சனி பகவான் ஆலயத்தில் உள்ள காசி அன்னபூரணி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் நன்கொடையாளர்கள் என்று ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. 

அதில் ஓபிஎஸ மகன் ரவீந்திரநாத் குமார் பெயருக்குப் பின்னால் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த கல்வெட்டில், எடப்பாடியை மட்டம் தட்டும் வகையில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

அந்த கல்வெட்டில் முதலில் நன்கொடையாளர்கள் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என பொறிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓபிஎஸ் பெயரும் இதையடுத்து ஓபிஎஸ்ன் மகன்கள் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி என்று இருக்கும்போது, மறைந்த ஜெயலலிதாவின் பெயரை முதலமைச்சர் என பொறித்திருப்பது, ஓபிஎஸ்ன் அதிருப்தியின் வெளிப்பாடே என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும் எடப்பாடிக்கு எதிராக இனி ஓபிஎஸ் களமிறங்குவார் எனவும் பேசப்படுகிறது.