கடந்த 2 நாட்களாக அதிமுக தலைமை தொடர்ச்சியாக பாஜகவிற்கு செக் வைக்கும் வகையில் பேசி வருவது அதிமுக தொண்டர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 5 தொகுதிகளை வாரி வழங்கியது அதிமுக. தமிழகத்தில் 2 சதவீத வாக்கு வங்கி கூட இல்லாத கட்சி பாஜக. ஆனால் அந்த கட்சிக்கு தேமுதிகவிற்கு ஒதுக்கியதை விட ஒரு தொகுதியை அதிகமாக வழங்கியது அதிமுக. இதற்கு காரணம் மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் தான். தமிழகத்தில் அதிமுக அரசு சிக்கல் இல்லாமல் 5 வருடங்களை நிறைவு செய்ய மத்திய அரசின் தயவு எடப்பாடி பழனிசாமிக்கு தேவைப்பட்டது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஐந்து தொகுதிகளை அதிமுக வாரி வழங்கியது.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி படு தோல்வியை சந்தித்தது. இதன் பிறகும் கூட பாஜகவுடனான கூட்டணியை முறிக்க அதிமுக தயாராக இல்லை. காரணம் மத்தியில் பாஜக அரசு. தமிழகத்தில் அரசு சிக்கல் இல்லாமல் தொடர மத்திய அரசின் கரிசனம் தேவை. இதனால் தான் கூட்டணி விவகாரத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அதிமுக – பாஜக கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் தொடரும் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவும் மத்திய பாஜக அரசின் கரிசனம் தேவை என்பதை எடப்பாடி உணர்ந்து வைத்துள்ளார்.

தேர்தல் சமயத்தில் அனைத்து அதிகாரங்களும் தேர்தல் ஆணையத்திடம் சென்றுவிடும். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் பறக்கும் படை என மத்திய அரசின் ஏஜென்சிக்கள் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று கூறி அவ்வப்போது ரெய்டு நடத்தும். இது போன்ற விஷயங்களை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் பாஜக தங்களுடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டிருந்தார். ஆனால் பாஜகவின் கணக்கு வேறு மாதிரியாக உள்ளது. இந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தது ஐந்து இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பது தான் பாஜகவின் இலக்கு.

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டாலும் ஒன்றில் கூட பாஜக வெல்வது கடினம் என்பதை அந்த கட்சி தலைமை உணர்ந்து வைத்துள்ளது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் வலுவான கட்சிகள் என்றால் திமுக மற்றும் அதிமுக தான். திமுக கூட்டணியில் பாஜக இணைய வாய்ப்பு இல்லை. எனவே அதிமுகவுடன் சேர்ந்தால் தான் கணிசமான வாக்குகளையாவது பாஜகவால் வாங்க முடியும். ஆனால் வெற்றி உறுதி இல்லை. அதே சமயம் திமுக அதிமுகவிற்கு மாற்றாக உருவாகும் வலுவான அணியில் இடம்பெற்றால் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

அந்த வகையில் ரஜினியின் அரசியல் வருகைக்காக பாஜக காத்திருக்கிறது. அத்தோடு மட்டும் இல்லாமல் அதிமுகவிடமும் 41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று பாஜக பேரம் பேச ஆரம்பித்துள்ளது. 41 தொகுதிகள் என்பதை ஏற்க எடப்பாடி பழனிசாமி துவக்கத்திலேயே மறுத்துவிட்டார். 21 தொகுதிகளில் ஆரம்பித்து தற்போது பாஜகவிற்கு 31 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது. ஆனால் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்பதுடன் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளையும் ஏற்கச் செய்ய வேண்டும் என்று அதிமுக எதிர்பார்க்கிறது.

ஆனால் பாஜகவோ பாமக, தேமுதிகவை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு ஆட்சியில் பங்கு எனும் முழக்கத்தை அதிமுகவிடம் முன்வைப்பதாக கூறுகிறார்கள். இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் தான் கேபி முனுசாமியை வைத்து தேசிய கட்சிகளுக்கு எதிராக பேசுவது போல் பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி சில செய்திகளை கூறியதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் கூட்டணி அரசுக்கு வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமியும் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அதிமுக தொண்டர்கள் உற்சாகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கோபப்பட்டு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் மகிழ்ச்சி என்று அதிமுகவினர் பேச ஆரம்பித்துள்ளனர். அதன் பிறகு மத்திய அரசிடம் இருந்து வரும் நெருக்கடியை அதிமுக எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.