தமிழகத்தை அடுத்தடுத்து தாக்கிய இரு புயல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்து அந்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியே அமைச்சர்களை நியமித்து அறிவித்துள்ளார்.  அவர்கள் அந்தந்த பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண பணிகளை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் மற்றும் புரவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. குறிப்பாக நிவர் புயலின் கோரத் தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடலூர், மரக்காணம், சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் புயல் காற்று வீசீயதால் பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தது. மரங்கள் விழுந்ததால் மின் கம்பங்கள் சாய்ந்தது. நூற்றுக்கணக்கான வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். 

புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட மழையின் காரணமாக ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். உயிர்ச் சேதம் இல்லை என்றாலும் பயிர் சேதம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது எனவும் அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், புயல் சேதாரங்களை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வருகை தந்துள்ளது,  குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்  ஏற்பட்டுள்ள பாதிப்புகளை  ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்து உள்ளது. 6ஆம் தேதியில் இருந்து 7ஆம் தேதி மாலை வரை பாதிக்கப்பட்ட இடங்களை இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். 4 நாள் ஆய்வை முடித்துக்கொண்டு 8 ஆம் தேதி மாலை டெல்லிக்கு திரும்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட தீவிரம் காட்டி வருகிறார். புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளார்.  அதன்படி சென்னை மாவட்டத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மாபா பாண்டியராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து அதற்கான நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர் தங்கமணி மற்றும் அமைச்சர் எம்.சி சம்பத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்திற்கு அமைச்சர் கே.பி அன்பழகன் மற்றும் காமராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்திற்கு எஸ்.பி வேலுமணி, ஓ.எஸ் மணியன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட அமைச்சர்கள் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.