பாஜகவின் கொள்கை வேறு அதிமுகவின் கொள்கை வேறு எனவும் மத்திய அரசுக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 

எடப்பாடி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருந்து வந்தது. ஆனால் எதிர்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்தன. 

இதையடுத்து பாஜகவும் அதிமுகவும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து கொண்டனர். ஆனால் மோடியும், தமிழக அரசின் ஆட்சியாளர்களும் இணக்கமாக இருந்து வருகின்றனர். 

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருவதாகவும் ஆனால் அப்படி இல்லை எனவும் தெரிவித்தார். 

திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை அழித்துவிட்டனர் என குறிப்பிட்டார் பொன்னார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் எனவும் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது எனவும் தெரிவித்தார். 

இவ்வாறு அடிக்கடி அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆர்.கே. நகரில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்  பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவின் கொள்கை வேறு அதிமுகவின் கொள்கை வேறு எனவும் மத்திய அரசுக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம் எனவும் தெரிவித்தார். 

மேலும் தமிழக அரசின் தேவைகளுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம் எனவும் பேசினார்.