முதல்வர் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை, சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், த.வெ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வெற்றிக்கான திட்டங்களை வகுக்க தொடங்கி விட்டன. இந்த சூழலில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவான ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் அதில் இருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் ஓ.பி.எஸ்.க்கு அடுத்த நிலையில் இருந்த வைத்திலிங்கம் தற்போது திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வைத்தியலிங்கம் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து, முதல்வர் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்தியலிங்கம், தனது ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை, ராஜினாமா செய்து விட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாட்டு முதலமைச்சரை பொதுமக்கள் போற்றுகிறார்கள், புகழ்கிறார்கள். எல்லாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்யும் திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.
அதிமுகவில் இருந்து நான் விலகினாலும் அண்ணா ஆரம்பித்த தாய் கழகத்தில் தான் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். தேர்தல் சீக்கிரமாக வரவுள்ளது முடிவு சீக்கிரமாக எடுக்க வேண்டும், அது கால தாகமானது. ஆகையால் திமுகவில் இணைந்துள்ளேன். நான் எந்த டிமாண்டும் வைக்கவில்லை.
திமுகவில் இருந்து வந்ததுதான் அதிமுக. திராவிட இயக்கம் அது தாய்க்கலகம். திமுக சமூகநீதி ஆரம்பித்தது. மக்களுக்காக சேவை செய்ய ஆரம்பித்த கழகம் திமுக. அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை சர்வாதிகாரமாக செயல்படுகிறது.
இன்னும் நிறைய பேர் திமுகவிற்கு வர உள்ளனர். முதலமைச்சர் தலைமையில் தஞ்சையில் 26 ஆம் தேதி இணைப்பு விழா நடைபெற உள்ளது. என்று தெரிவித்தார். டிடிவி தரப்பில் தனிப்பட்ட முறையில் என்னை இணைவதற்கு அழைத்தார்கள் ஆனால் நான் செல்லவில்லை. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன் அவர்களின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை.


