முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி தமிழக விவசாயிகளின் பொற்கால ஆட்சி என பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகாசி பழனியாண்டவர் காலனியில் கழக சட்டமன்ற அலுவலகம் திறக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட கழக  பொறுப்பாளரும், பால்வளத் துறை அமைச்சருமான கே.டி ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து சிவகாசி சட்டமன்ற தொகுதியில் மாநில கமிட்டி அமைப்பது, பெண் வாக்கு சேகரிப்பாளர்கள் குழு அமைப்பது, பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கட்சி நிர்வாகிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்கள் சேர்க்கைக்கான படிவத்தை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது: புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கழகத்தையும் கழக ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆட்சி காலம் விவசாயிகளின் பொற்காலமாக திகழ்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கழக அரசு அமைய சிறப்பாக தேர்தல் பணிகளை செய்திட வேண்டும். 

கழக அரசின் சாதனைகளை வீடு வீடாக எடுத்துச் செல்லுங்கள், சட்டமன்ற தொகுதி மட்டுமல்ல விருதுநகர் மாவட்டம் கழகத்தின் கோட்டையாகும், அதைத் தொடர்ந்து நிரூபிக்கும் வகையில் வரும் தேர்தலில் கழகப் பணியை சிறப்பாக செய்து கழக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.