புரெவி புயல் காரணமாக உயிரிழந்த 7 பேரது குடும்பத்தினருக்கு,  மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாயும்,  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 6 லட்சம் ரூபாய் என மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 

இந்திய வானிலை ஆய்வு மையம், 3.12.2020 அன்று இரவு பாம்பன் -கன்னியாகுமரி அருகில் ‘புரெவி’புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, உடனடியாக போர்க்கால அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. இப்புயலின் காரணமாக, கடலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

புரெவி புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில், கடற்கரையோரங்களில் மற்றும் ஆற்றோரங்களில் வசிக்கும் 36,986 எண்ணிக்கையிலான நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 363 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான சூடான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு, நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், குடும்பம் ஒன்றிற்கு 10 கிலோஅரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஒரு கிலோ பருப்பும், ஒரு லிட்டர் சமையல் எண்ணெயும் வழங்க நான் உத்தரவிட்டேன்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், வீடு வீடாக சென்று, உணவு பொட்டலங்கள், குடிநீர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் ஆகியவற்றை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், தேவைக்கு ஏற்ப, நடமாடும் உணவகங்கள் அமைத்து, சூடான உணவு வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். 

புயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க எனது தலைமையிலான அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் புரெவி புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.