சட்டவிரோத மதுபாரில் திமுக நிர்வாகிகள் வன்முறை.! சைலன்ட் மோடில் போலீஸ்- இபிஎஸ் ஆவேசம்

கோவை பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வந்த மது பாரில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தட்டி கேட்டவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Edappadi Palanichamy condemned the incident of beating a man to death by DMK workers in an illegal liquor bar

சட்டவிரோத மதுபாரில் அதிக விலைக்கு மதுபானம் விற்றதை தட்டி கேட்டவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சட்ட விரோத பார்கள் மூலம் போலி மது பானங்கள் விற்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரடிமடை பகுதியைச் சேர்ந்த திரு. செல்வராஜ் (வயது 55) என்பவரை, திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகியோர் அடித்துக் கொலை செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வத்துள்ளன.

திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் காளம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வருவதாகவும், ஆனால், தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள கிராமங்களில் சட்ட விரோதமாகவும், கூடுதல் விலைக்கும் மதுபானங்களை விற்பனை செய்வதாகவும், மூன்று நாட்களுக்கு முன்பு திரு. செல்வராஜ் என்பவர் திமுக நிர்வாகியின், சட்ட விரோதமாக மது விற்கும் இடத்தில், ஏன் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து திமுக-வின் இளைஞர் அணியைச் சேர்ந்த ராகுல், கோகுல் மற்றும் உடனிருந்த அடியாட்கள் கரடிமடைக்குச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் திரு. செல்வராஜை அடித்து இழுத்துச் சென்று காட்டுப் பகுதியில் அடித்துக் கொலை செய்ததாக செய்திகள் கூறுகின்றன.

 

Edappadi Palanichamy condemned the incident of beating a man to death by DMK workers in an illegal liquor bar

இந்நிலையில் இறந்த திரு. செல்வராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை முடித்த காவல் துறையினர், உடனடியாக திரு. செல்வராஜின் உடலை எரிக்குமாறு அவரது குடும்பத்தினரை வற்புறுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சம்பவம் நடைபெற்ற கிராமங்களுக்குத் திமுக ரவுடிகள் சென்று அங்குள்ள மக்களிடம் யாரும் எங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்று மிரட்டுவதாகவும், இதனால், அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்புடனும், பதற்றத்துடனும் இருப்பதாகத் தெரிகிறது.


குறிப்பாக, கோவை மாவட்ட திமுக செயலாளர் திரு. ரவி என்பவரின் ஆதரவில் மாவட்டம் முழுவதும் சட்ட விரோத மது விற்பனை நடந்து வருவதாகவும், ஆனால், கோவை காவல் துறை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக பொதுமக்கள் கூறுவதோடு, ஊடகங்களும் தெரிவிக்கின்றன. காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் திரு. செல்வராஜின் கொலை சம்பவம் நடந்திருக்காது. ஏற்கெனவே காவல் துறை, கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபான விற்பனையை முளையிலேயே கிள்ளியிருந்தால், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயத்திற்கு 23 பேர் பலியாகியிருக்க மாட்டார்கள். இந்த சட்டவிரோத மது விற்பனை மற்றும் கொலை சம்பவங்களுக்குக் காரணமான ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட அனைவர் மீதும், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவலர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios