அ.தி.மு.க.வின் சீனியர்கள் மட்டுமில்லை நடுநிலையாளர்கள் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் மீசை முறுக்கை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். ’நான் உருவாக்கிய ஆட்சி’ என்று அவர் எந்த அர்த்தத்தில், தைரியத்தில் சொல்கிறார்? என்பதுதான் அதன் உட்காரணம். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் இல்ல திருமணவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை கோயமுத்தூர் சென்றார் எடப்பாடியார். சிங்காநல்லூர் எனுமிடத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசியவர், தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட அ.தி.மு.க. எதிரிகளையும், கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் தனது சொந்த எதிரிகளையும் விளாசித் தள்ளி பேசினார். 

அப்போது, இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா என்ற தெய்வம் பக்கபலமாக இருந்து நான் உருவாக்கிய இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் அகற்ற முடியாது என்பதை இறைவன் சார்பிலே நல்ல தீர்ப்பை நமக்கும் கொடுத்திருக்கிறார்கள்.” என்று பேசினார். இதில் ‘நான் உருவாக்கிய ஆட்சியை’ என்பது, தமிழக அரசியல் அரங்கில் பெரும் வைரலாகியுள்ளது. அரசியல் விமர்சகர்கள் “எந்த அடிப்படையில் எடப்பாடியார் இதை தான் உருவாக்கிய ஆட்சி என்கிறார்? அவருக்கும் இந்த ஆட்சி உருவாக்கத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? பன்னீரை பிடிக்காத காரணத்தினால் சசிகலா அவரை ராஜினாமா செய்ய வைத்தார். 

அடுத்து தன் கைக்கு கீழே நிற்கும் நபர்களில் யார் தன் பேச்சைக் கேட்பார்கள் என பார்த்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். சசிகலாவின் காலை வணங்குவதற்காக எடப்பாடியார், குட்டிப் பிள்ளைகள் யானை போன்று நடப்பதுபோல் மூட்டால் நடந்துபோன வீடியோ இன்னமும் கோடிக்கணக்கான நபர்களில் மொபைலில் சிரித்துக் கொண்டிருக்கிறது. சசிகலா, பழனிசாமியை தேர்வு செய்யாமல் திண்டுக்கல் சீனிவாசனையோ, செல்லூர் ராஜையோ அல்லது எம்.ஆர். விஜயபாஸ்கரையோ அல்லது எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜையோ தேர்ந்தெடுத்திருந்தால் அவர்தான் இன்று முதல்வர். அவரைத்தான் டெல்லி தன் கையில் வைத்து ஆட்டி வைத்திருக்கும். அவர்கள் சொல்படி அந்த நபர் கேட்டிருப்பார். 

ஆக இதுதான் யதார்த்தம். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் எடப்பாடி அரசை பன்னீர் கோஷ்டி கவிழ்க்க முயன்ற போதும், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பிலும் என எல்லாமே மேலே இருந்து நடத்தப்படும் காப்பாற்றுதல்கள். டெல்லிக்கு இங்கே ஒரு கைக்கடக்கமான ஆட்சி தேவை, அதனால் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறது. ஆக யார் முதல்வராக இருந்திருந்தாலும்  தீர்ப்புகள் இப்படித்தான் இருந்திருக்கும். சூழல் இப்படியிருக்க எடப்பாடியார் என்னவோ தன்னால்தான் இந்த ஆட்சி உருவாகியிருக்கிறது, காப்பாற்றப்பட்டுள்ளது, இன்னும் தொடர்கிறது! என்று நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. அவரது அந்த வார்த்தை ஜெயலலிதாவின் புகழை மறைக்கின்ற மமதையான வார்த்தை.” என்று விமர்சித்துள்ளனர். 

 

ஆனால் எடப்பாடியாருக்கு ஆதரவாக பேசும் சில அ.தி.மு.க. சீனியர்களோ “இல்லை, எடப்பாடியாரிடம் என்றுமே மமதை இல்லை. வரவும் செய்யாது. 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு ஆட்சிக்கு சாதகமாக வந்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் அவர். இதை கொண்டாடும் விழாவாகவே கிட்டத்தட்ட கோயமுத்தூர் நிகழ்வுகளை எடுத்துக் கொண்டுள்ளார். ‘எனது ஆட்சி’ எனும் இறுமாப்பில் அவர் கூறவில்லை அம்மாவின் ஆட்சி என்று சொல்வதற்கு பதில் மாற்றியோ, மறந்தோ அல்லது தீர்ப்பின் மகிழ்விலோ இப்படி சொல்லியிருக்கலாம். 

யார் முதல்வர் பொறுப்பில் இருந்திருந்தாலும் தீர்ப்புகளும் எல்லாமும் இப்படித்தான் இருக்கும். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி எடப்பாடியார் நல்லவர், பண்பானவர், ஆர்பாட்டம் இல்லாத மனிதர்.” என்கின்றனர். தமிழக பாலிடிக்ஸ் அரங்கில், எடப்பாடியார் உதிர்த்த ஒற்றை வாத்தையை வைத்து பட்டிமன்றம் இப்படி பரபரக்கிறது. தீர்ப்பு என்னவோ மக்களின் கையில்தான்!