Edappadi Palaniasamy does not know what is right - Kanimozhi teasing ...

கன்னியாகுமரி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை என்றால் என்னவென்று தெரியவில்லை என்று கனிமொழி எம்.பி. சுட்டிக் காட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் ஈரோடு தி.மு.க. மாநாடு விளக்க பொதுக் கூட்டம் ஆகியவை சுசீந்திரம் தெற்கு ரத வீதியில் நேற்று இரவு நடைப்பெற்றது. 

இந்தக் கூட்டத்தில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். 

அப்போது அவர், "தமிழகத்தில் அ.தி.மு.க.வின் பின்னால் இருந்து கொண்டு பா.ஜனதா கட்சி ஆட்சியை நடத்துகிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமரை சந்திக்க டெல்லி செல்வதாக கூறிவிட்டு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். ஆனால், தமிழக முதலமைச்சரை சந்திக்க பிரதமருக்கு நேரம் இல்லை என அவரது அலுவலகம் கூறி இருக்கிறது.

தமிழகத்தில் விவசாயிகள் தங்களின் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க பிரதமர் மறுக்கிறார். 

“கலைஞர் கருணாநிதி உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்று கூறினார். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உரிமை என்றால் என்னவென்று தெரியவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம், புயலால் பெரும் பாதிப்பை சந்தித்தது. மக்கள் புயலால் கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருந்த நேரத்தில் தமிழக முதலமைச்சர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக அங்கு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். 

கன்னியாகுமரி மக்களின் நிவாரணத்திற்காக போராட்டம் என்று தி.மு.க. அறிவித்த பின்னரே, முதலமைச்சர் அவசரமாக புறப்பட்டு இங்கு வந்து மக்களை சந்தித்தார். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நிவாரணம் சரிவர வழங்கப்படவில்லை. நஷ்டஈடு என்ற பெயரில் மக்களை ஆட்சியாளர்கள் அவமதிக்கிறார்கள்" என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.