புயலைவிட வேகமாக செயல்பட்டதால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். 

தமிழகத்தை புயல்கள் தாக்கிய போது எல்லாம், அதை சமாளிக்க முடியாமல் அப்போதைய ஆட்சியாளர்கள் திணறியது வெளிப்படையான ஒன்று. ஆனால் நிவர் புயலை எடப்பாடி அரசு சமாளித்த விதம் பலரது பாராட்டை பெற்றுள்ளது. உண்மையில், புயல் உருவான போதே, அதுவும் தமிழகத்தை தாக்கப்போகிறது என்ற தகவல் வந்ததும் பலருக்கும் பீதி ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு எப்படி எடுக்க போகிறது, இந்த அரசு சொன்னால் அதிகாரிகள் கேட்பார்களா என்றெல்லாம் பலருக்கும் சந்தேகம் இருந்தது.

ஆனால். அவற்றையெல்லாம் முறியடித்து, அனைத்து துறைகள், அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை மீட்பு குழுக்கள் என்று அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து புயலின் சேதத்தை பெருமளவு எடப்பாடி பழனிசாமி அரசு குறைத்துவிட்டது. 

இது தொடர்பாக திருச்செங்கோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி;- நிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது. நிவர் புயலால் 2,488 மின்கம்பங்கள் சேதமடைந்தது. மின்னல் தாக்கியதில் 108 மின்மாற்றிகள் பாதிப்படைந்துள்ளது. நிவர் புயலால் மின்துறையில் ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை ரூ.15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. 

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் முழுமையாக மின்விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது. சென்னையில் 95% மின் இணைப்பு தரப்பட்டுவிட்டது. இன்று இரவுக்குள் முழுமையாக மின் விநியோகம் செய்யப்படும். இனிவரும் காலங்களில் புயல், மழையால் பாதிக்காத வகையில் புதைவிட மின்கம்பிகள் அமைக்கப்படும். நிவர் புயலின்போது மின்வாரியம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளனர்.