சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு ரகசியமாக சென்று அவரை சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசிவிட்டு திரும்பியுள்ளார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வந்துள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தது பல்வேறு யூகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இருந்தாலும் பொன்னார் – எடப்பாடி இடையிலான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பு விளக்கம் அளித்துள்ளது.

மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் பொன்னார்-எடப்பாடி சந்திப்பை ரகசியமாக வைத்திருந்தது ஏன் என்கிற கேள்வி எழுந்தது. இது குறித்து விசாரித்த போது தான், அமித் ஷா சென்னை வர உள்ள நிலையில் பா.ஜ.க மேலிடம் எதிர்பார்க்கும் சில விஷயங்களை பொன்னார் முதலமைச்சரை நேரில் சந்தித்து கூறிவிட்டு வந்துள்ளார். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.கவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை அறியவே பொன்னார், ரகசியமாக சென்று எடப்பாடியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

.

 ஒவ்வொரு மாநிலத்திலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.கவின் நிலைப்பாட்டை இறுதி செய்யும் வேலையில் அமித் ஷா உள்ளார்.  மேலும் மாநிலம் தோறும் கூட்டணி அமைக்கும் வேலைகளையும் அமித் ஷா தொடங்கி உள்ளார். எனவே தான் அ.தி.மு.க நாடாளுமன்ற தேர்தலின் போது எடுக்கும் நிலைப்பாடு குறித்து அறிந்து அதனை அமித் ஷாவிடம் தெரிவிக்க எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்துள்ளார் பொன்னார் என்று சொல்லப்படுகிறது. சந்திப்பின் போது பெரும்பாலும் பிடி கொடுக்காமலேயே எடப்பாடி பேசியதாக கூறப்படுகிறது.  மேலும் வருமான வரித்துறையினர் தற்போத நடத்தி வரும் சோதனை குறித்தும் எடப்பாடி, மத்திய அமைச்சர் பொன்னாரிடம் அதிருப்தி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

அதற்கு பிரச்சனையை தான் பார்த்துக் கொள்வதாகவும், நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாட்டை சீக்கிரம் எடுத்து தங்களிடம் தெரிவிக்குமாறும் கூறிவிட்டு பொன்னார் எடப்பாடி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அப்போது, சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிரானவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு முதலமைச்சரை பொன்னார் பாராட்டியதாகவும் சொல்லப்படுகிறது.