பெரியாரை தமிழ்ச்சமுதாயாம் கடவுள் மறுப்பாளராக பார்க்கவில்லை எனவும் அராஜக போக்கை அதிமுக ஆட்சி அனுமதிக்காது எனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. 

இந்நிலையில், பாஜக தொண்டர்கள் திரிபுராவில் அமைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றினர். லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப் போல், தமிழகத்தில் பெரியார் சிலைகள்  உடைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழகத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைந்து ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 

இதையடுத்து ஹெ.ராஜா அந்த பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார். ஆனாலும் கண்டனங்கள் வலுத்தன.

இதற்கு விளக்கம் கொடுத்த ஹெச்.ராஜா தனது அட்மின் தனக்கு தெரியாமல் அப்படியொரு பதிவை போட்டுவிட்டார் எனவும் அதை உடனடியாக நீக்கிவிட்டேன் எனவும் விளக்கம் அளித்தார். 

ஆனாலும் தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 

அதில், அதிமுக ஆட்சி அராஜக செயல்களை அனுமதிக்காது. அமைதியாக இருப்போம் என்று யாரும் கனவில் கூட நினைக்க வேண்டாம்.பெரியாரை தமிழ்ச் சமுதாயம் கடவுள் மறுப்பாளராகப் பார்க்கவில்லை.

தந்தை பெரியார் இல்லையெனில் திராவிடத்தில் எழுச்சி இல்லை.தமிழகத்தில் ஜாதி, மத கலவரம், தீவிரவாதம் இல்லாமலும் பல மாநிலங்கள் எரிந்த போதிலும், தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.

அமைதியான பூங்காவில் எச்.ராஜா கல்லெறிந்துவிட்டார்.தமிழகத்தில் குழப்பம் விளைவித்து அதில் மீன் பிடிக்க முடியாது.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.