தமிழக சட்டப்  பேரவையில் பேசிய ஒரத்தநாடு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர், புல்லட் ராமச்சந்திரன், தமிழகத்தில் புதிய நெல் ரகங்களை கண்டு பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுப் புது நெல் ரகங்களை கண்டு பிடிக்க கோவை வேளாண் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்துக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எம்எல்ஏ ராமச்சந்திரன், மேட்டூர் அணை தூர் வாரப்படுவதால் ஆழம் அதிகமாகி கடைமடைப் பகுதிக்கு தண்ணீர்  பாய்வதில்லை  என்றும் அதனால் மேட்டூர் அணை தூர்வாரப்படுவதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீங்கள் சொல்வது தவறு என்றும் அணை தூர் வாரப்படுவதால் கூடுதலாக நீர் தேக்கப்படுவதாக தெரிவித்தார். அதன் மூலம் ஏரி, குளம், கண்மாய்களில் மழை நீர்  சேமிக்கப்படுவதாக கூறினார்.

மேலும் மேட்டூர் அணையில் மெயின் பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர் தள்ளித்தான் வண்டல் மண் அள்ளப்படுவதாகவும், அதிலும் விவசாயிகள் உரத்துககாக  மட்டுமே அள்ளுவதாகவும்  தெரிவித்தார். அந்தப் பணியை அரசு கண்காணிக்கிறதே தவிர விற்பனை செய்வதில்லை என்றும் தெரிவித்தார்.
நானும் விவசாயிதான், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினரும் விவசாயிதான் அதனால் இதில் உள்ள நன்மைகளை  அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சட்டப் பேரவையின்  நேரத்தை வீணாக்காமல் உருப்படியாக கேள்வி கேட்ட  திமுக உறுப்பினர் புல்லட்  ராமச்சந்திரனையும், அதற்கு உருப்படியாக பதில் அளித்த முதலமைச்சரையும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராட்டினர்.