Edapadi Team are waiting for Dinakaran join ADMK Iftar
இரட்டை இலை லஞ்ச வழக்கால் 45 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் ஜாமீனில் வெளிவந்துள்ள அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இனி தான் அடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சறுக்கி விடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாகவே உள்ளார்.
32 எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்து பேசியிருப்பதால் அதிமுக அரசின் எதிர்காலம் டிடிவியிடம் தான் இருக்கிறது.. எதாவது பன்னுங்க. இனியும் முஷ்டி முறுக்கிட்டு இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என எடப்பாடிக்கு உடனிருந்தவர்கள் ஆலோசனை சொல்ல, இப்தார் நோன்பு திறப்பு மூலம் டிடிவி.க்கு வெள்ளைக் கொடி காட்டி சமாதானத்திற்கு தூதுவிட்டிருக்கிறது ஈ.பி.எஸ்.டீம்.
அதிமுகவின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் விருந்து நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான நிகழ்ச்சி சென்னை வர்த்தக மையத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் டிடிவி ஐ பங்கேற்க வைக்க வேண்டும் என்பதற்காக பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் வைத்து தினகரனை எடப்பாடி அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிகழ்வு குறித்துப் பேசிய அதிமுக நிர்வாகி ஒருவர், “விழாவில் நீங்க பங்கேற்க வேண்டும் என்பது தான் எடப்பாடியின் நோக்கம்.கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்து விட்டு நிகழ்ச்சியில் கலந்துக்குங்க என்று அவரிடம் வலியுறுத்தினோம். ஆனால் மனுஷன் எதுக்குமே பிடிகொடுக்காமல் பேசி அழைப்பு விடுக்கப் போனவரையே குழப்பிவிட்டிருக்கிறார். இப்தார் விருந்தில் டிடிவி.தினகரன் கலந்து கொள்வரா என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்” என்று புலம்பியிருக்கிறார்.
இப்தார் விருந்து அழைப்பு குறித்துப் பேசிய டிடிவி, தரப்பினர், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மன்னார்குடியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி, சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்திப்பதற்காக பெங்களூரு போனாரு. அப்போது தினகரனுக்கான அசைன்மென்டுகள் குறித்து அளிக்கப்படும் தகவலை அடுத்த இப்தார் விருந்தில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
இப்தார் நோன்பு திறப்புக்கு இன்னும் ஆறு நாட்கள் இருப்பதால், அடுத்த ஒவ்வொரு நொடியும் தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
