Asianet News TamilAsianet News Tamil

அம்மா மருந்தகங்களை மூட அரசு திட்டம்? கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!!

மலிவு விலையில் மருந்துகள் விற்கும் அம்மா மருந்தகங்களை மூடும் நடவடிக்கை கைவிடவேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

edapadi palanisamy said that stop closing amma medicals
Author
Chennai, First Published Nov 20, 2021, 2:03 PM IST

மலிவு விலையில் மருந்துகள் விற்கும் அம்மா மருந்தகங்கள் மூடும் நடவடிக்கை கைவிடவேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகள் கிடைத்திட வேண்டும் என்ற அடிப்படையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 100 அம்மா மருந்தகங்களை தொடங்க உத்தரவிட்டதாகவும் ஆடத்தெரியாத ஒருவர் கூடம் கோணல் என்று சொல்வது போல், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றத் தெரியாத திமுக அரசு, நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி, அம்மாவின் அரசால் நிறைவேற்றப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா கண்டு வருவதாக குற்றம்சாட்டினார். அம்மா சிமெண்ட் விற்பனைக்கு மூடு விழா செய்துவிட்டு, பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன், வலிமை சிமெண்ட் என்று தி.மு.க. அரசு பெயர் மாற்றம் செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

edapadi palanisamy said that stop closing amma medicals

மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சுத்தமான அம்மா குடிநீரின் உற்பத்தியை முழுமையாகவே நிறுத்திவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், அம்மா மினி கிளினிக் மற்றும் அம்மா நடமாடும் மருத்துவமனைகளுக்கு மூடு விழா செய்துவிட்டு, மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன் அம்மாவின் அரசு கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு இல்லம் தேடி மருத்துவம் என்று தி.மு.க. அரசு பெயர் மாற்றம் செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், பருப்பு, காய்கறி, சிமெண்ட் போன்ற மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது அம்மாவின் அரசு, மாநில விலை நிலைப்படுத்தும் நிதியைப் பயன்படுத்தி மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்று வந்ததை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் ஆனால் இந்த தி.மு.க. அரசு, தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல், அம்மாவின் அரசு ஏற்கனவே மக்களுக்கு நிறைவேற்றிய பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா செய்த நிலையில் இப்போது நிதிச் சுமையை காரணம் காட்டி அம்மா மருந்தகங்களையும் மூட முடிவு செய்துவிட்டதாகத் தகவல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.

edapadi palanisamy said that stop closing amma medicals

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிதி ஆதாரத்தைப் பெருக்கவும் இரண்டு வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, அந்தக் குழுக்கள் என்ன செய்கின்றன? அரசுக்கு என்னென்ன ஆலோசனைகள் வழங்கின? என்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மக்கள் நல அரசு என்றால் மக்களின் நலனைக் காக்கும் அரசு. ஆனால் இந்த அரசோ மக்களின் நலத்திட்டங்களைப் பறிக்கும் அரசாக உள்ளது என்று கூறிய அவர், நிதி நிலைமையை மேம்படுத்தி, வருவாயைப் பெருக்க வழி தெரியாமல் தவிக்கும் இந்த கையாலாகாத அரசு, அம்மா அரசால் தொடங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் மக்களின் உயிர் காக்கும் தரமான மருந்துகளை சலுகை விலையில் விற்கும் அம்மா மருந்தகங்களை மூடி, தனியார் மருந்தகங்களை லாபம் கொழிக்க அனுமதிக்கும், மக்கள் நலனுக்கு எதிரான இந்த முடிவை அரசு உடனே கைவிட வேண்டும் என்றும் தனது அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios