நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை அதிமுக கைப்பற்றும் என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை அதிமுக கைப்பற்றும் என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்க உள்ளதாக அறிவித்துவிட்டன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மட்டுமே பெரிய கட்சியாக இருந்தது. இந்த நிலையில் பாஜக தனித்துப்போட்டியிட உள்ளதாக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே அதிமுக - பாஜக தனித்தனியே போட்டி. வருங்காலத்தில் கூட்டணி தொடரும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே பாஜகவுடன் கூட்டணி.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட அளவு தான் இடங்கள் ஒதுக்க முடியும். நகர்புற தேர்தலில் அதிமுகவினர் அதிக இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். கட்சி நிர்வாகிகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது எங்களின் கடமை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து அவதூறு பேசிய நைனார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துவிட்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வருத்தம் தெரிவித்துவிட்டார். தவறு செய்யாதவர்கள் இல்லை எனவும் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக- பாஜக தனித்து போட்டியிடுவதால் கூட்டணி முறிந்ததாக அர்த்தமில்லை. ஒவ்வொரு கட்சியிலும் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டும் என்று விரும்புவார்கள். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் குறிப்பிட்ட அளவு மட்டுமே இடங்களை ஒதுக்க முடியும், வாய்ப்பு கொடுக்க முடியும். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் 12, 838 பேருக்கு வாய்ப்பு கொடுக்க முடியும்.

அந்தந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவார்கள். அனைத்து கட்சிகளும் அவர்களது கட்சி தொண்டர்களின் கோரிக்கையை நிறைவேற்ற விரும்புவார்கள். அந்த சிரமம் அனைத்துக் கட்சிகளுக்கும் உண்டு. இதன் காரணமாகவே கூட்டணியில் உடன்பாடு ஏற்படாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே பாஜக- அதிமுக தனித்து போட்டியிடுகிறது. எங்களது கட்சியை சேர்ந்தவர்கள், அவரவர்களது கோட்டத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்கள். அதன்படி அவர்களது கோரிக்கையை அதிமுக நிறைவேற்றி இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களை பெறும் என்றும் அவர் கூறினார்.