Asianet News TamilAsianet News Tamil

ஓ.பி.எஸ் ஆதரவாளருக்கு டெண்டர் ஒதுக்கீடு: அமைச்சர்களின் எதிர்ப்பால் ரத்து செய்த எடப்பாடி!

edapadi palanisamy cancelled tender for ops supporters
edapadi palanisamy-cancelled-tender-for-ops-supporters
Author
First Published Apr 3, 2017, 3:27 PM IST


யார் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், அரசு ஒப்பந்த பணிகள் எப்போதுமே, பசையுள்ள பார்டிகளுக்குதான் வழங்கப்படும். அதில் ஆதரவு அணி, எதிர்ப்பு அணி என்று எதுவும் இல்லை.

அதன்படியே, முதல்வர் எடப்பாடியும் பலநூறு கோடி ரூபாய் அளவிலான, பொதுப்பணித்துறை மற்றும் வேளாண்துறை ஒப்பந்த பணிகளை, ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஆர்.எஸ்.முருகன் என்பவருக்கும், தமது உறவினர் ஒருவருக்கும் இறுதி செய்து வைத்திருந்தார்.

இதில் 400 கோடி ரூபாய் அளவிலான ஒப்பந்தங்களை ஓ.பி.எஸ் ஆதரவாளரும், மணல் முருகன் என்று சொல்லப்படும் ஆர்.எஸ்.முருகன் என்பவருக்கு இறுதி செய்து வைத்திருந்தார் முதல்வர் எடப்பாடி.

மணல் முருகன், கடந்த ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வம், பொது பணித்துறை அமைச்சராக இருந்த பொது, பல டெண்டர்களை பெற்று சம்பாதித்தவர்.

மேலும் சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ வை, ஓ.பி.எஸ் அணியில் கொண்டு சேர்த்தவரும் அவரே என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில், அவருக்கு டெண்டர் வழங்கிய, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்துள்ளார் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு.

ஓ.பி.எஸ் ஆதரவாளருக்கு டெண்டர் வழங்கினால், நம் அணிக்கு ஆதரவாக செயல்படும் ஒப்பந்ததாரர்கள், நமக்காக எப்படி உதவிகள் செய்வார்கள்?. 

பன்னீர்  ஆதரவாளருக்கு டெண்டர் இறுதி செய்யப்படுகிறது என்றால், நாங்களெல்லாம், இந்த அணியில் இருக்க வேண்டும். ஓ.பி.எஸ்சுக்கே  ஆதரவளித்து  சம்பாதித்துக் கொள்ளலாமே என்று கடுமையாக பேசி உள்ளார்.

துரைக்கண்ணுவின் கோபத்தால், அச்சமடைந்த  முதல்வர் எடப்பாடி, ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட பல நூறு கோடிகளுக்கான அரசு டெண்டர்களை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.

அதே போல, கடலூர் மாவட்டத்துக்கான பொதுப் பணித் துறை ஒப்பந்தங்கள், ஈரோட்டைச் சேர்ந்த முதல்வர் பழனிச்சாமியின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்டன. 

அதனால், ஆத்திரமடைந்த  கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத், முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து கடுமையாக பேசியுள்ளார். 

உங்கள் உறவினரை கொண்டு வந்து கடலூரில் விட்டால், அங்கே இருந்து நாங்கள் எல்லாம் எப்படி அரசியல் செய்ய முடியும்? என்று கொந்தளித்திருக்கிறார்.

அப்போது, அவருடன் இருந்த கடலூர் மாவட்ட  முன்னாள் எம்.எல்.ஏ.,க்களும் முதல்வரை கடுமையாகக் கடிந்து கொண்டுள்ளனர்.

இதனால், அப்செட் ஆன முதல்வர் பழனிச்சாமி, கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பொதுப் பணித் துறை ஒப்பந்தங்களையும் ரத்து செய்திருக்கிறார். 

தினகரன் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து, அவ்வப்போது முட்டுக்கட்டைகள் போட்டு வரும் நிலையிலும், முதல்வர் இப்படி ஆட்டம் போடுகிறாரே? என்று அதிமுகவினரே புலமை வருகின்றனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios