Party Leaders Condemns Edapadi Palanisami name in RK Nagar Money distribute list

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்.கே.நகர் பண பட்டுவாடா குறித்த ஆவணங்கள் சிக்கியதாக வெளியான தகவல் அனைவரும் அறிந்ததே.

அதில், ஆர்.கே.நகர் தொகுதியில், முதல்வர் எடப்பாடி, எத்தனை பேருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்? என்று எழுதப்பட்டிருந்த தகவல் இடம் பெற்றிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஏற்கனவே, தமிழக தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையே, தமிழகத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா பட்டியலில், முதல்வர் பெயரும். அவர் கொடுக்கவேண்டிய தொகை ஆகியவை குறிப்பிடப்பிடப் பட்டிருப்பது, தமிழத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது.

வருமான வரித்துறையிடம் சிக்கிய ஆவணத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் செங்கோட்டையன் பெயருக்கு கீழே எழுதப்பட்டுள்ளது. 

முதல்வர் பெயருக்கு நேராக 13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் என்று எழுதப்பட்டுள்ளது. 39 ஆயிரத்து 50 வாக்காளர்களை இவர் கவர் செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதேபோல ஒவ்வொரு அமைச்சர்கள் செலவிட வேண்டிய தொகை, கவர் செய்ய வேண்டிய வாக்காளர் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்.கே. நகரில் ஒரு வாக்காளருக்கு ரூ.4000 கொடுக்க திட்டம் போடப்பட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை மொத்தம், 2 லட்சத்து 62 ஆயிரத்து, 721 ஆகும். இதில், 85 சதவிகித வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஒரு மாநில முதல்வரே வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது, தமிழகத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.