முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் இன்று மாலை 6.30 மணியளவில் அவசர ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடனான இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குட்கா விவகாரம் தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. சிபிஐ ரெய்டு விஜயபாஸ்கருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது வீட்டில் சந்தித்து, குட்கா விவகாரம் தொடர்பாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 30 எம்.எல்.ஏ.க்களுடன் டிடிவி தினகரனோடு சென்று விடுவேன் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. 

இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாது மூத்த பத்திரிகையாளர்களின் தகவல் பரிமாற்றத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வாட்ஸ் அப் செய்தியை விவரம் தெரிந்தவர்கள் கூட உறுதிபடுத்தியதாக கூறப்படுகிறது. எனவே, இந்த வாட்ஸ் அப் செய்தியை சாதாரண ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் ரூபத்தில் சிக்கல் வரும் என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்கள் மீது எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டுளும் ஊழல் புகார்களும் கூறி வருகிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய முடியும் என்று முதலமைச்சர் எடப்படி பழனிசாமி கூறியுள்ளார். 

அதேபோல் அமைச்சர் வேலுமணி மீது எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்றும் முதலமைச்சர் கூறியிருந்தார். தமிழக அமைச்சர்கள்மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாலை 6.30 மணியளவில் நடைபெறும் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மூத்த அமைச்சர்கள், அவசர அவசரமாக சென்னை திரும்பியுள்ளனர்.