கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு,  பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவை முக்கிய 8 துறைகளாகும். 
தொழில்துறை குறியீட்டை கணக்கிடுவதில் இந்த 8 துறைகளின் பங்களிப்பு சுமார் 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதனால் எட்டு துறைகளின் துறைகளின் வளர்ச்சியை வைத்தே தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஓரளவு யூகிக்க முடியும்.

2019 செப்டம்பர் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி சுமார் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.2 சதவீதம் குறைந்துள்ளது. பொருளாதார முன்னேற்றத்தில் ஏற்பட்டுள்ள சரிவை இது வெளிப்படுத்துகிறது. தற்போது பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. 2018 செப்டம்பர் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி 4.3 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் முக்கிய 8 துறைகளில் 7 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி கடும் சரிவு கண்டதே இதற்கு காரணம். 2011-12ம் நிதியாண்டில் பதிவான புள்ளிவிவரங்களை காட்டிலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் முக்கிய 8 துறைகள் வளர்ச்சி கடும் சரிவு கண்டுள்ளது. 

நேற்றுதான் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு கண்டுள்ளதால் இன்று பங்கு வர்த்தகம் எப்படி இருக்குமோ என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி இந்த மாதம் பொருளாதார மந்த நிலை, தொழில் துறை நலிவடைந்தது போன்ற விவகாரங்களை கண்டித்து நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த உள்ளது. 

இந்த சூழ்நிலையில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு கண்டு இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அரசை எதிர்க்க சரியான துருப்பு சீட்டாக அமைந்து விட்டது. இதனால் பா.ஜ.க. கொஞ்சம் கலவரத்தில் உள்ளதாக தகவல்.