அதிமுக தேர்தலில் அளித்துள்ள வாக்குறுதி படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூபாய் 2000 உதவித்தொகை இன்னும் இரண்டு மாதங்களில் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

நெல்லை மாவட்டம் தென்காசியில், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தலைமையில், அ.ம.மு.க.வினர், அக்கட்சியில் இருந்து விலகி, தாய் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிச்சாமி நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்தார். மேலும், அ.ம.மு.க.வின் கூடாரமே காலியாகி, அதிமுகவில் இணைந்திருப்பதாக கூறினார். மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில், மக்களிடம் ஆசை வார்த்தைகளை காட்டி திமுக வெற்றி பெற்றுள்ளது என முதல்வர் குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியை யாரும் அசைக்கவும் முடியாது, ஆட்டவும் முடியாது என்றார். 

மேலும் பேசிய அவர், சில கருப்பு ஆடுகள் கட்சியில் இருந்து விலகி சென்றதால் இயக்கம் தூய்மை பெற்றுள்ளது. வல்லரசு நாடுகளில் கூட இல்லாத வகையில், தமிழ்நாட்டில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் கூறினார். இன்னும் ஓரிரு மாதங்களில் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.