யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை இ-பாஸ் முறை இருந்தால்தான் கண்டறிய முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பொது போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இடையில் மாவட்டங்களுக்குள் மட்டும் தனிநபர்கள் பயணிக்க அனுமதிக்க வழங்கப்பட்டது. ஆனால் மற்ற வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு பயணிக்க இ-பாஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பாஸ் பெற கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதால் பலருக்கும் கிடைக்காமல் தவித்தனர். பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , தமிழகத்தில் இ-பாஸ் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும் இபாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து வருவதற்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் கடலூரில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘’ தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.

 தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது. உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை இ-பாஸ் முறை இருந்தால்தானே கண்டறிய முடியும்’’ என்று அவர் கூறினார். இதன் மூலம் அடுத்த மாதமாவது இ-பாஸ் நீக்கப்படும் என நினைத்திருந்த மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். முதல்வரின் இந்த அறிவிப்பு அடுத்த மாதமும் இ-பாஸ் முறை நடைமுறையில் இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.