Duraimurugan Speech about DMK Active Chief Stalin
திமுகவை கட்டிக்காப்பார் தளபதி ஸ்டாலின். இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று 94-வது பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நாள் விழாவும், சட்டமன்றத்தில் அவர் 1957-ம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருவதால் சட்டமன்ற வைர விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையட்டி கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு தொண்டர்கள் அதிக அளவில் வந்தார்கள்.
நள்ளிரவு 12 மணிக்கு அவரது வீட்டு வாசலில் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இன்று காலையிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதி வீட்டு முன்பு திரண்டு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில், கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் சட்டபேரவை வைர விழா பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள ராகுல்காந்தி, நிதிஷ்குமார், டெரிக் ஓ பிரையன், டி.ராஜா,சீதாராம்யெச்சூரி, நாராயணசாமி, திருநாவுக்கரசர் மற்றும் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். விழாவுக்கு வந்துள்ள தேசிய தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி திமுக செயல் தலைவர் வரவேற்றார்.
விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய துரைமுருகன், கருணாநிதியின் பெருமைகளை எடுத்துக்கூறினார். அப்போது அவர் பேசியதாவது; கருணாநிதியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 தலைமுறை தலைவர்களும் வாழ்த்தியுள்ளனர். அவரை கட்சி பேதமின்றி வாழ்த்துவதற்கு அனைவரும் வந்துள்ளனர். அனைவரையும் ஒருங்கிணைந்த ராஜதந்திரி ஸ்டாலின். இந்த இயக்கத்தை கட்டிக்காப்பார் தளபதி ஸ்டாலின் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் துரைமுருகன் கூறினார்.
