அரசியல் மேடைகளில் மகிழ்வான விஷயங்களை பேசாமல், ஏதாவது பிரச்னையை பேசி நெருடலை உருவாக்குபவர்களை ‘தலைவாழை இலை போட்டு விருந்து பரிமாறி, பாயச்த்துல சர்க்கரை கொட்டாம ஒரு பிடி உப்பை அள்ளி போட்டுட்டார்!’ என்று நயமாக குட்டு வைப்பது துரைமுருகனின் வழக்கம். 
ஆனால் அந்த துரையே, வைகோவின் பொன்விழா மேடையில் உப்பை அள்ளி வைத்துவிட்டார்! என்று விளாசுகிறார்கள் விமர்சகர்கள். 
அந்த விழாவில் வைகோவை வாழ்த்தி பேச வந்த துரைமுருகன், பொன்விழா மலரில் தான் எழுதியிருக்கும் கட்டுரையை வாசித்தபடியே பேசினார். அப்போது...
“வைகோ! எனது கல்லூரி தோழர்!
ஹாஸ்டலில் சகவாசி!” என்று துவங்கி...
பாராளுமன்ற அவைகளில் வைகோ கர்ஜித்ததையும், எந்த பிரதமருக்கும் அஞ்சாமல் அவர் பேசியதையும், கருணாநிதி 18 ஆண்டுகள் வைகோவை இந்திய நாடாளுமன்றத்தில் சீற அனுமதித்திருந்ததையும், வவுனியா காடுகளில் வைகோ வலம் வந்ததையும், இலங்கை தீவுகளில் வெடிப்பவர் இலக்கியமும் பேசுவார்! என்றும் பலவாறு வாழ்த்தி எழுதியிருந்ததை வாசித்தார். 
பின் இறுதியில்...
“அடுத்த அரை நூற்றாண்டும் வெற்று நூற்றாண்டாக ஆகிவிட கூடாது. இனம் பார்த்துப் பழகு! களம் பார்த்துக் கால் வை! இதுவே என் ஆசை!” என்று முடித்தார். 
இதில்தான் வைகோ பிரியர்கள் துரைமுருகன் மீது முரண்படவும், கோபம் கொள்ளவும் செய்கிறார்கள். 
வைகோவின் ஐம்பதாண்டு பொன்விழா மேடையில் பேசியவர் ”துரை தனது பேச்சில் ‘அடுத்த அரை நூற்றாண்டும் வெற்று நூற்றாண்டாக ஆகிவிட கூடாது!’ என்கிறாரே அதன் அர்த்தமென்ன? கலைஞரின் நிழலாக பல காலம் வாழ்ந்து அமைச்சர் பதவியை அனுபவத்து, தனது பல தலைமுறைக்கு பணம் சேர்த்திருக்கிறார் துரைமுருகன். இப்போதும் இளைஞர்களுக்கு வழி கொடாமல், ஸ்டாலினின் நிழலாகவே நின்று கொண்டிருக்கிறார். இவரெல்லாம் அரசியலில் ஜெயித்துவிட்டார் என்று அர்த்தமா?
தலைவர் வைகோவோ தனக்கு வந்த மத்திய மந்திரி பதவியை தன் சகாக்களுக்கு விட்டுக் கொடுத்தார். தான் ஜெயிக்க வேண்டிய எம்.பி. தொகுதியில் தன் சிஷ்யனை ஜெயிக்க வைத்தார். தோல்வி துரத்தியடித்தாலும் நம்பிக்கை இழக்காமல் மக்களுக்காக போராடுகிறார். ஸ்டெர்லை, ஹைட்ரோ கார்பன், டாஸ்மாக் என்று மக்களுக்காகவே வாழும் வைகோவின் அரசியல் தோற்றுவிட்டது என்கிறாரா துரை? பதவியும், பகட்டும், அதிகாரமும், பணமும்தான் அரசியலில் நிறைவு! என்றால் அப்படியானவை அவருக்கு தேவையில்லை. ஏழை அரசியல்வாதியாக, மக்களின் மனதில் வாழ்ந்தால் போதுமென்று நினைப்பவரே எங்கள் தலைவர் வைகோ!” என்று வெடித்திருப்பவர்கள், 
“இறுதியாக அதென்ன ’இனம் பார்த்துப் பழகு!’ என்கிறார் துரை. இன்று துரைமுருகனெல்லாம் தி.மு.க.வில் உச்ச பதவியிலிருக்கலாம். எங்கள் தலைவர் அன்று தி.மு.க. தலைமையிடம் கொஞ்சம் அணுசரித்து  போயிருந்தால் இன்று துரைமுருகனெல்லாம் டி.கே.எஸ். இளங்கோவனுக்கு பக்கத்தில்தான் நின்றிருக்க வேண்டும். நினைவிலிருக்கட்டும். 
தன்மானத்தில் சமரசம் செய்ய தெரியாதவன் எங்கள் தலைவன்.” என்றிருக்கிறார்கள். 
நடக்கட்டும்!