Asianet News TamilAsianet News Tamil

முல்லை பெரியாறு அணை விவகாரம்… அதிமுக ஆட்சியை கழுவி ஊற்றிய துரைமுருகன்!!

முல்லை பெரியாறு அணை குறித்து பேச ஒபிஎஸ்-இபிஎஸ்க்கு உரிமை இல்லை என்றும் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், ஒரு அமைச்சர் கூட பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சுட்டிகாட்டியுள்ளார்.

duraimurugan press meet
Author
Theni, First Published Nov 5, 2021, 7:26 PM IST

முல்லை பெரியாறு அணையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். காலை 11.45 மணிக்கு தேக்கடி படகு நிறுத்த பகுதிக்கு சென்ற அமைச்சர் துரைமுருகன் அங்கிருந்து தமிழக பொதுப்பணித் துறை படகு மூலம் அணைப் பகுதிக்கு சென்றார். அங்கு மெயின் அணை, பேபி அணை, கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் ஷட்டர்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது அவருடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, வருவாய் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பொதுப்பணித்துறை தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், தேனி ஆட்சியர் முரளிதரன், உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என்றும் புதிய அணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் விரைவில் படகுகள் இயக்கப்படும் என்று கூறிய துரைமுருகன், அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறபதற்கான பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லை பெரியாறு அணையை பன்னீர்செல்வம் ஒரு நாள் கூட பார்வையிடவில்லை என்று சாடிய அமைச்சர் துரைமுருகன், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், ஒரு அமைச்சர் கூட பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை என்றும் முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் தார்மீக உரிமை இல்லை என்றும் தெரிவித்தார்.

duraimurugan press meet

இருவரும் அமைச்சராக இருந்த போது எதுவும் செய்யாமல் தற்போது உண்ணாவிரதம் இருக்கிறோம் என்றால் நாடு சிரிக்காதா என்றம் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், முல்லை பெரியாறு அணையில் 30 ஆண்டு சராசரியை கணக்கிட்டு நீர் தேக்கும் உயரம் கணக்கிடப்பட்டது என்றும் தற்போதைய நிலவராடி முல்லை பெரியாறு அணையில் 139.05 அடி உயரம் வரை நீரை தேக்கி கொள்ளலாம் என்றும் 30 ஆண்டு சராசரி கணக்கீட்டுபடி நவம்பர் 30ம் தேதி முல்லை பெரியாறில் 142 அடி உயரம் வரை நீரை தேக்கலாம் என்றும் தெரிவித்தார். பேபி அணையில் உள்ள 3 மரங்களை அகற்ற வனத்துறை அனுமதி அளிக்கவில்லை என்று கூறிய அவர், பேபி அணை கட்டுவதற்கு இடையூறாக விழுந்து கிடக்கும் 3 மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் 3 மரங்களையும் அகற்றவிடாமல் கேரளத்தின் ஒரு துறை மற்றொரு துறையை நோக்கி கை காட்டி வருவதாகவு 3 மரங்களும் அகற்றப்பட்டால் தான் பேபி அணையை உடனடியாக கட்ட முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனக்கு நீண்ட காலமாக அறிமுகமானவர் என்றும் நல்ல நண்பர் என்றும் கூறிய அமைச்சர் துரைமுருகன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காலத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios