கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த நேரம் அது. அதிசயமாக ஒரு நாள் ஓய்வாக தனது கோபாலபுரம் இல்லத்தில் உட்கார்ந்து சில சீனியர் அமைச்சர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். எப்போதும் கருணாநிதியின் இடது புறம் அமர்ந்திருக்கும் துரைமுருகன் அப்போது அங்கு இல்லை. பேச்சின் நடுவில் தனது வலது புறம் பார்க்கிறார், கடிகாரத்தைப் பார்க்கிறார். 

பிற அமைச்சர்களுக்குப் புரிந்துவிட்டது. இந்த நேரத்தில் சட்டென்று அங்கே நுழைகிறார் துரைமுருகன். உடனே அவரைப் பார்த்து ‘வாய்யா! காட்பாடியின் கதாநாயகா’ என்றார் கருணாநிதி. அந்த அறையே சந்தோஷம் கலந்த சிரிப்பலையால் நிறைந்தது. பல சினிமா ஹீரோக்களுக்கு அடையாளம் கொடுத்த கருணாநிதியால், அரசியல் ஹீரோவாக விளிக்கப்பட்டவர் துரைமுருகன். 

அதேபோல் ஒரு முறை அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்தது. எல்லா அமைச்சர்களும் சென்ற பின், அந்தல் உயர்ந்த ஒல்லியான பெண் அமைச்சரை அழைத்து அவரது குடும்பம் சேர்த்துக் கொண்டிருக்கும் சொத்து பற்றிய லிஸ்டை கொடுத்து. ‘கவனமாக இரும்மா’ என்று எச்சரித்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. 

அப்போது அந்த லிஸ்டை சற்றே எட்டிப்பார்த்துவிட்டு, ‘அடேயப்பா’ என்றார் துரைமுருகன். உடனே ‘என்னய்யா அடேயப்பா. நீ உன்னோட மெடிக்கல் காலேஜே நம்ம கட்சிக்கு எழுதி வைக்கிறியா?’ என்று ஒரு பறாண்டு பறாண்டினார். இப்படி கருணாநிதியால் ஷொட்டும், குட்டும் வாங்கி அரசியலில் வளர்ந்தவர் துரைமுருகன். கருணாநிதியின் மறைவுக்குப் பின் ஸ்டாலினின் நிழலாகவே இருக்கிறார். ஸ்டாலினும் அவருக்கு முழு சுதந்திரம், மரியாதை, அதிகாரம் தந்திருந்தார். 

பொன்முடி, ஆற்காட்டார் மகன்களைப் போலவே துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கும் இந்த நாடாளுமன்ற  தேர்தலில் ஸீட் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதியில் பண விநியோகத்தால் தேர்தல் ரத்தாகி, கட்சியின் பெயர் விமர்சிக்கவும் பட்டது. ஆனால் அதன் பின்னும் கதிர் ஆனந்தையே வேட்பாளராக அறிவித்து, பிரசாரத்துக்காக இரு நாட்கள் அங்கே தங்கியும் இருந்தார். கதிர் ஆனந்தின் வெற்றியில் ஸ்டாலினின் பங்கு மிகப்பெரிது. இதையெல்லாம் துரைமுருகனுக்காகவே செய்தார் ஸ்டாலின். அப்படி தான் மதித்திருந்த துரைமுருகனை கடந்த சில நாட்களாக ஸ்டாலின் கண்டுகொள்வதில்லை என்று தகவல். ஏன்? என்று தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலரிடம் கேட்டபோது “கடந்த சில நாட்களாகவே துரைமுருகனின் போக்கு தலைவருக்கு பிடிக்கலை. காரணம்  எந்த ஒரு சூழலில் கதிர் ஆனந்தை மீண்டும் வேட்பாளராக்கினார் ஸ்டாலின் என்பது உலகமறிந்தது. 

ஆனால் ஆனந்த் எம்.பி.யான பின், சென்னை ரயில்வே கோட்டத்திற்கான ஆலோசனை குழுத் தலைவர் பதவியை தன் மகனுக்கு பெற்றுத் தர முயற்சி எடுத்தார் துரைமுருகன். இந்த விஷயத்தில் தலைவர் ஸ்டாலினை கேட்காமல், அவரிடம் கலந்தாலோசிக்காமல் இவராகவே முடிவெடுத்து மூவ்  பண்ணினார். தன் மகனுக்கு ஆதரவு தரும்படி பல எம்.பி.க்களுக்கு தன்னிச்சையாக போன் போட்டு கேன்வாஸ் செய்திருக்கிறார். நினைத்தபடியே மகனுக்கு பதவியையும் வாங்கிக் கொடுத்துட்டார். இதெல்லாமே ஸ்டெப் பை ஸ்டெப் தலைவர் ஸ்டாலினின் காதுகளுக்கு வந்துடுச்சு. கட்சியின் தலைவரான தன்னை கன்சிடர் பண்ணாமல் துரைமுருகன் இப்படி செயல்பட்டதும், தன்னை பைபாஸ் பண்ணியதும் ஸ்டாலினை அப்செட்டாக்கிடுச்சு. 

அதேபோல் சமீபத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் கூட்டம் சென்னையில் நடந்தப்ப தயாநிதி மாறனிடம் சற்றே உரத்த குரலில் துரைமுருகன் பேசினார். இதுவும் ஸ்டாலினை அப்செட் பண்ணிடுச்சு. அதனாலதான் இப்ப கொஞ்ச நாட்களா துரைமுருகனை கொஞ்சம்  தள்ளி வைக்க துவங்கிட்டார் ஸ்டாலின். இந்த பஞ்சாயத்தெல்லாம் தலைமை வட்டாரத்தில் பரபரப்பா ஓடிட்டு இருக்குது.” என்றார். இந்த நிலையில் ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும் இடையிலான பிளவு உச்சம் பெற்றுவிட்டதால் துரைமுருகனின் கழக பதவி பறிபோக வாய்ப்புள்ளது, இது தெரிந்து வருத்தத்தில் இருக்கும் துரையை அ.தி.மு.க. வட்டாரம் நெருங்கி அரவணைக்க துவங்கியுள்ளது! என்று கிளப்பி விட்டுக் கொண்டுள்ளது ஒரு டீம்.