அடுத்த ஆட்சி தி.மு.க.வுடையதுதான்! என்று பெரும் கனவில் இருக்கிறார் மு.க. ஸ்டாலின். இது அக்கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் உட்பட தொண்டர்களுக்கு ஒரு சந்தோஷம்தான் என்றாலும் கூட, ஸ்டாலின் தலைமையில் அமையப்போகும் அமைச்சரவையை நினைத்துதான் கொதிக்கிறார்கள். 

காரணம்? கடந்த பல வருடங்களாக தி.மு.க. ஆட்சியமைக்கும் போதெல்லாம் கேபினட் அமைச்சராக கோலோச்சி வருபவர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டவர்கள். இவர்களில் துரைமுருகன் எல்லோரையும் விட சூப்பர் சீனியர். அது மட்டுமல்ல ஒரு காலத்தில் கருணாநிதியின் நிழலாகவும், அதன் பின் ஸ்டாலினின் நிழலாகவும் இருந்து கொண்டு கட்சியின் அதிகாரத்தின் உச்சத்தை அணுஅணுவாக ருசிப்பவர். அடுத்து கழகம் ஆட்சியமைக்கையில் இவர் மீண்டும் பொதுப்பணித்துறையில் வந்தமர்ந்து கொண்டு ஆடுவார்! தனக்கு அடுத்து நிற்கும் இளைஞர்களுக்கு வழி விடாமல் தான் மட்டுமே பல்லாண்டாக பதவிப் பல்லாங்குழி ஆடிக் கொண்டிருக்கிறாரே! என்பதுதான். 

இது போதாதென்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின் மூலம் தன் மகன் கதிர் ஆனந்தை எம்.பி.யாக்கிவிட்டார் வேலூர் லோக்சபா தொகுதிக்கு. கட்சி கரைவேஷ்டி கட்டிக்  கொண்டு, கழகம் நடத்திய போராட்டங்களில் நடுத்தெருவில் வந்து நிற்காமல், ஏஸி காரில் வலம் வந்த கதிர் இப்படி அழுங்காமல் எம்.பி.யானதை நினைத்து கொதித்துக் கிடக்கிறார்கள் தி.மு.க. தொண்டர்கள். ஆனால் அதையெல்லாம்  அலட்டிக்காமல் தாங்கள் வன்மையாக எதிர்க்கும் பா.ஜ.க.வின் தலைமையிடம் பேசி தன் மகனுக்காக ரயில்வே குழுவில்  பதவி வாங்கிக் கொடுத்து அழகு பார்க்கிறார் துரை.  

நக்கல் மற்றும் நய்யாண்டித் தனமான பேச்சில் அரசராக வலம் வருபவர் துரைமுருகன். கருணாநிதி, அன்பழகன்ம், ஸ்டாலின் தவிர மற்ற எல்லோரையும் வயது வித்தியாசம் பார்க்காமல் ஹாஸ்ய சாயம் தடவி, நறுக்கென கிண்டலடித்துவிடுவார். அந்த ட்ரீட்மெண்டை தன் சொந்த மகனுக்கும் அவர் கொடுக்க, கதிர் ஆனந்தோ கன்னாபின்னாவென கோபமாகிவிட்டார். 

சமீபத்தில் வேலூர் எம்.பி. தொகுதியின் உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது. அந்த விழாவில் பேசிய கதிர் ஆனந்த்,  மாவட்ட செயலாளரான ஏ.பி.நந்தகுமாரை பார்த்து ‘அணைக்கட்டு சட்டசபை தொகுதியின் நிரந்தர எம்.எல்.ஏ. நந்தகுமார் அவர்களே’ என்று புகழ்ந்து பேசினார். கட்சியினர் ரசித்து வைத்தனர். 

அதன் பின் மைக் பிடித்த துரைமுருகன் “அதென்ன நிரந்தர எம்.எல்.ஏ.? நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் என்றால் வரும் தேர்தலில் அவருக்கு சீட் உறுதி என்று அர்த்தமா? சட்டமன்ற உறுப்பினரை தலைமைதான் முடிவு செய்யும்” என்றவர், தன் மகன் கதிர் ஆனந்தை பார்த்து “உன்னை இந்த தொகுதியின் எம்.பி.யாக முடிவு பண்ணவே நான் பட்ட பாடு இருக்குதே!” என்று நக்கலாக பேச, கரகோஷம் விண்ணை தொட்டுவிட்டது. 

பொது இடத்தில் இப்படி தன் அப்பா தன் மானத்தை வாங்கிவிட்டாரே என்பது போல் கதிரின் முகம் கருத்துவிட்டது. இதை உடனே உணர்ந்துவிட்ட துரைமுருகன் ‘கழக தலைவர் எடுப்பதுதான் வேட்பாளர்கள் விஷயத்தில் இறுதி முடிவு. கதிர் ஆனந்த் எம்.பி. தேர்தலில் நிற்க வேண்டும் என்று முடிவெடுத்தவரும் அவரே. நானில்லை.” என்று சொல்லி மகனை குஷியாக்கிவிட்டார். 
ஆனாலும் ‘நக்கலடிக்குறதுன்னு முடிவு பண்ணிட்டா, தன் சொந்த மகனை கூட விட்டு வைக்கிறதில்லை துரை’ என்று வேலூர்  தி.மு.க.வினர் கலகலக்கின்றனர். 

நக்கலோ நய்யாண்டியோ, குடும்பமே அதிகார மையமா இருக்குறதை கவனிச்சீங்களா!?